tamilnadu

img

ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறிப்பு இளைஞருக்கு 10 ஆண்டு சிறை - மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூர், மே 28-திருப்பூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மனைவி அருக்காணி (71). தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ந் தேதியன்று வீட்டில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் பின்புறம் வழியாக புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அருக்காணி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டுதப்பியோடினார்.  இது குறித்து திருப்பூர் மத்திய துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில் வீடுபுகுந்து நகையை பறித்து சென்றது, கோவை மாவட்டம் சின்னதடாகத்தை சேர்ந்த நந்தகுமார் (27) என்பதும், அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.இதன் பேரில் திருப்பூர் மத்திய காவல்துறையினர் வழக்குப் பதிவு நந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி ஜெயந்தி திங்களன்று தீர்ப்பளித்தார்.இதில் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் நந்தகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;