tamilnadu

வேதாரணியம் பகுதியில் இடி, மழை

நாகப்பட்டினம், ஏப்.19-கோடை வெப்பம் எங்கும் சுட்டெரிக்கும் நிலையில், வியாழக்கிழமை இரவு, வேதாரணியம் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதில் இடி, மின்னல்தாக்கி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 12 பேர், பாதிக்கப்பட்டு, அதில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வீடு இடிந்து விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.வேதாரணியம் ஒன்றியம், ஆயக்காரன்புலம் 2-அம்சேத்தி கிராமத்தில் இடி, மின்னல் தாக்கப்பட்டு 12 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஜெனனி, சந்திரா, வீரமணி ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வேதரணியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வாய்மேடு- சிந்தாமணிக்காடு பகுதியைச் சேர்ந்த காசியம்மாள் என்ற 60 வயது தலித் பெண், வியாழக்கிழமை மாலை, வாக்குச் சாவடிக்குச் சென்று, தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டுத் தனது வீட்டுக்கு வந்தார்.


அன்று இரவு, இடியும் மழையும் பெய்ததில், அவரது காலனி வீடு மேற்கூரை இடிந்து விழுந்ததில் காசியம்மாள் பலியானார்.பழுதடைந்த காலனி வீடுகள்ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக சாலை வசதி இல்லாத இடங்களில் 30, 35 ஆண்டுக்கு முன்பு, தலித்மக்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இவை,காலனி வீடுகள் என அழைக்கப்படுகின்றன. எப்போது இந்த வீடுகள் கட்டப்பட்டனவோ, அது முதல், இதுவரை எவ்விதமான பழுதுகளும் சரி செய்யப்பட்டதில்லை. வசிக்க முடியாத முடியாத, தனி அறை, சமையலறை ஏதுமில்லாத மிக மோசமான தொகுப்பு வீடுகள் இவை.இந்தக் காலனி வீடுகளில் வதையும் ஏழை எளிய தலித் மக்கள், தங்கள் வீடுகளைச் சீர் செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடும்போதெல்லாம், காலனி வீடுகளைஅரசு சீர் செய்ய விதி இல்லை.அவர்களாகவே தான் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களுக்கு பதிலாகக் கிடைக்கும். அன்றாடம் உண்ணுவதற்கே அல்லாடும் இந்த ஏழை மக்கள், காலனி வீட்டைச் சீர் செய்திட எப்படி முடியும்? அரசுஇதற்கு ஏதேனும் சட்டவழி ஏற்படுத்தி, இந்தக் காலனி வீடுகளைப் புனரமைக்க வேண்டும் என்று காலனி வீடுகளில் வசிக்கும் தலித் மக்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள்.

;