tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் பல இடங்களில் மின்சார தடை: பொதுமக்கள் அவதி

சென்னை, மே 8-சென்னையில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பானி புயல் சென்னைக்கு மிக அருகில் வந்து திசை மாறி சென்றதால் ஈரப்பதம் முழுவதையும் புயல் இழுத்துச் சென்று விட்டது. இதன் காரணமாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. காலை 10 மணிக்கே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் நீடிக்கிறது.இந்த சூழலில் பராமரிப்பு பணி என்ற பெயரில் சென்னையில் பல பகுதிகளில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகத்தை நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.முகப்பேர், திருவொற்றியூர், வடபழனி உள்பட சில பகுதிகளில் இரவு நேரங்களிலும் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் வீடுகளில் ஏ.சி. சரிவர இயங்காமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இரவில் அதிகளவில் மின் தடங்கல் ஏற்படக் கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மின் பராமரிப்பு பணி பகலில்தான் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்து விடுகிறது. மின் தடங்கல் குறித்து முன் கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம்” என்றார்.


குடிநீர் தொட்டி பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி

சென்னை, மே 8-சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் வசிப் பவர் அருண்குமார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் எண்ணை வியாபாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளதால் தனது கடையின் முன் பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய் தார். அதற்காக அங்கு 10 அடிக்கு பள்ளம் தோண்டி கான்கிரீட் இரும்பு கம்பியால் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அயனாவரம் புதுதெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (65). எண் ணூர் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் புதன்கிழமை காலை அந்த கடைக்கு எண்ணை வாங்க வந்தார். அவர் எண்ணை வாங்கிவிட்டு திரும்பும் போது எதிர்பாரதவிதமாக கால் தவறி குடிநீர் தொட்டிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்தார். இதில் அங்கிருந்த கம்பிகள் மதுசூதனன் தலையின் முன் பக்கம் குத்தி பின் பக்கமாக வந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் காவல் துறையினர் மதுசூதனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;