tamilnadu

img

மதுரை எம்பி-யின் கோரிக்கையை ஏற்றுப் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை மக்களவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளொன்றுக்கு 3000 சோதனைகள் எடுக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1500 பேருக்கு சோதனைகள் எடுக்கப்படுகின்றது. மக்கள் அதிகமாக வந்தால் அதிகப்படியான சோதனைகள் எடுக்கப்படும் என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பரிசோதனைகளிலிருந்து பின்வாங்காது. மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கையையும் ஏற்றுத்தான் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளிலேயே கண்காணித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களைப் பரிசோதனை செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். மதுரையில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனே மதுரையில் ஊரடங்கை அறிவிக்க முடியாது. பரிசோதனைகள் அதிகரிக்கும் போது, அதன் முடிவைப் பொறுத்து அதற்கேற்ற  நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள்.. மதுரை பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணியாமல் தான் வருகிறார்கள் எனவே தங்களுடைய குடும்ப பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும்  கருத்தில் கொண்டு கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

;