tamilnadu

img

கீழடி ஆய்வறிக்கையை திருத்த சொல்வது குற்றம்! - அமர்நாத் ராமகிருஷ்ணா

கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பண்டைய நாகரிகத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்ட கீழடி அகழாய்வு அறிக்கையை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறைக்கு அந்த அறிக்கையை வெளியிடாமல், திருப்பி அனுப்பியது. அத்துடன், அந்த அறிக்கையை தாங்கள் கூறுவது போல திருத்தி எழுதுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் அமர்நாத் ராமகிருஷ்ணா வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இது தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அமர்நாத ராமிகிருஷ்ணா, கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம் மட்டுமல்ல அது அநீதியானது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை திருத்துவேனே தவிர, உண்மையை திருத்த மாட்டேன். 
கிமு 8ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கிமு. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என ஒன்றிய அரசு மாற்ற வலியுறுத்துகிறது. நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும்.
அறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும்.
அவர்கள் எப்போதும் சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம், மௌரிய மற்றும் ஹர்ஷவர்தன வரலாற்றைப் பற்றியே பேசுகிறார்கள், ஏன் நாட்டின் பிற பகுதிகளை பார்ப்பதில்லை..?
மூன்றாவது கட்ட அகழாய்வில் ஈடுபட்ட ஸ்ரீராம், கீழடி அகழாய்வு குறித்து எந்த பின்னணியும் தெரியாதவர். அவரை ஆய்வு செய்ய சொன்னால் "ஒன்றும் இல்லை" என்றுதான் சொல்வார்." இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.