ஆர்எஸ்எஸ் புதைகுழிக்குள் சிக்கியது அதிமுக தான்!
எடப்பாடி பழனிசாமிக்கு பெ. சண்முகம் பதிலடி
சென்னை, ஜூலை 17 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக-வைக் குறிப்பிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணிக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதாக அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பாஜகவோடு கூட்டணி. போன வாரம் கம்யூனிஸ்டுகளையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் எனும் புதைகுழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.