tamilnadu

மாதர் சங்கம் வழிகாட்டல்... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் ஆக.17- அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் ஏற்பாட்டில், தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது பரவலாக பெற்றோர்கள், மாணவர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  தமிழகத்தில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. அதற்கான அறிகுறியும் இல்லாமல் உள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். போதிய வசதிகளும், இணைய தள இணைப்பும் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருவது தனிக்கதை.  ஆனால், ஆன்லைன் மூலம் மாணவர்கள் படிக்க எவ்வித வசதிகளும், கட்டமைப்பும் இன்றி அரசுப் பள்ளிகளின் நிலை உள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமலும், வேறு வழி தெரியாமலும் தவித்து வருகின்றனர்.

இதில் கிராமப்புற மாணவர்களின் நிலையோ படுமோசமாக உள்ளது.  இதை கருத்தில் கொண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஒன்றியம் பஞ்சநதிக்கோட்டையில் ஆசிரியை மகாலட்சுமி, தஞ்சை மாநகரம் விளார் பகுதியில் ஆசிரியை பி.செல்வி, பூக்காரத் தெருவில் ஆசிரியை எஸ்.பைந்தமிழ், அம்மாபேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டையில் 2 இடங்களில் ஆசிரியை பி.ஜனனி, எம்.சுசித்ரா ஆகியோர் மேற்பார்வையில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி கூறுகையில், “முதல்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் 5 இடங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் 15 முதல் 20 மாணவர்கள் வந்தனர். இனிவரும் காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம்.  காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் பயிற்சி வகுப்பில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். அந்தந்த பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், ஆசிரியர்களைக் கொண்டு, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சேவை மனப்பான்மையுடன் செயல்படும் ஆசிரியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.  இராராமுத்திரைக் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சோழன், துணைத் தலைவர் எல்.பிரகலாதன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கேத்தரின் நிர்மலா மற்றும் கிராமத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

;