புதுச்சேரி, ஜன. 30- புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை இதுவரைக்கும் வழங்காமல் உள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிறுப்பதாவது:- புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கி 9 மாதங்களை கடந்துவிட்டது. ஆனாலும் இதுவரைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை. இந்த ஆண்டு சீருடை வழங்க வாய்ப்பில்லை என கல்வித்துறை அறி வித்துள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுவும், அடையாள பூர்வமாக வெறும் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், இடப்பற்றாக்குறையும் நிலவுகிறது. மேலும் புத்தகங்கள் கூட முழுமையாக வழங்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி இருக்கும் என்பதை கல்வித்துறையும் அதற்கு பொறுப்பு வகிக்கும் பாஜகவின் அமைச்சரும் பதில் சொல்லியாக வேண்டும். இந்த அவல நிலைக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும். புதுச்சேரியை ‘பெஸ்ட்’ புதுச்சேரியாக மாற்றுவதாக சொல்லிவிட்டு ஏற்கனவே இருந்த நிலையை விட மோசமான நிலையில் அரசு கல்வித்துறையை மாற்றி மாணவர்களின் எதிர்காலத்தை சூரையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. புதுச்சேரியில் ஜி 20 மாநாடு நடத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை கூட நிறைவேற்றாமல், ஊதாரித்தனமாக செலவு செய்து போலி விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு அரசு நினைக்கிறது. எனவே உடனடியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான சீருடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.