திருச்சிராப்பள்ளி, செப்.2 - திருச்சி கீழரண் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடப்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறார்களுக்கான திரைப்படக் காட்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பேசுகையில், “தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவ,மாணவிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர்களது புதிய பார்வை மற்றும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவது குறித்தும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. காட்சி ஊடகங்கள் மாணவர்களுடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்த தமிழக அரசு, காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு வழிகாட்ட முனைந்துள்ளது. அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதம் ஒரு சிறார் திரைப்படங்களை திரையிடவும் அறிவுறுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில், இம்மாதத்திற்கான சிறார் திரைப்பட நிகழ்விற்காக ஈரானியத் திரைப்படம் ‘சொர்க்கத்தின் குழந்தைகள்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக திரையிடப்பட்டது” என்றார்.