சேலம், மே 11-சேலம் மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் மனுதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.சேலம் மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் எந்த ஒரு தயக்கமும் இன்றி புகார் அளிக்கும் வகையிலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பு பிரிவு ஏற்படுத்தி அங்கு காவலரை நியமித்து புகார் மனு பெறப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனியன்று சேலம் டவுன் ரயில்வே நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் மாநில அளவில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்தமுகாமினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் துவக்கி வைத்தார். இதில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனுக்களை அளித்தனர். இதேபோல், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பு ஏற்படுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருவதாக சேலம் மாநகர ஆணையாளர் சங்கர் தெரிவித்தார்.