நெசவாளர் கோரிக்கையை அலட்சியப்படுத்துவதா? ஆரணியில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, செப்.29- திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திங்கட்கிழமை (செப்.29) ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மே 26ஆம் தேதி ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இலவச வீடு கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனு விவரங்களை வழங்க மறுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டிக்கும் விதமாக வும், நகர்ப்புறங்களில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கேட்டு கைத்தறித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எம். வீரபத்திரன், பொருளாளர் வி. குமார், சிஐடியு ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினர் ஆர். பாரி, சிஐடியு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு நிர்வாகிகள் பெ.கண்ணன், சி. அப்பாசாமி, சேவூர் பால்ராஜ், தியாகராஜன், சைதாப்பேட்டை தமிழ்ச்செல்வன், அருள், வாழைப்பந்தல் கிட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
