நூறு நாள் வேலை 150 நாளாக உயர்த்தி கோரிக்கை
செங்கல்பட்டு,செப்.29- மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் 4 மணிநேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தாமூர் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சித்தாமூர் ஒன்றிய மாநாடு ஞாயிறன்று (செப்.28) இந்தளூரில் ஒன்றியத் தலைவர் எஸ்.எம்.சம்பந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கே.மகாலட்சுமி வரவேற்றார். செயலாளர் எஸ்.மணிகண்டன் வேலை அறிக்கையையும் பொருளாளர் பி.ரவி வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயணி துவக்கவுரையற்றினார். ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.மாலாசிவா, ஊராட்சி மன்ற துணை தலைவர் இ.அம்பிகா ஏழுமலை, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், வாலிபர் சங்க சித்தாமூர் ஒன்றியத் தலைவர் ஜி.முகுந்தன், மாற்றுத்திறனாளிசங்க மதுராந்தகம் ஒன்றியத் தலைவர் செயலாளர் எம்.லோகநாயகி, எஸ்.வளத்தி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலைவர் எம்.வெள்ளிக்கண்ணன் நிறைவுரையாற்றினார். ஏ.மனோன்மணி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக எஸ்.எம்.சம்பந்தமூர்த்தி, செயலாளராக பி.ரவி, பொருளாளராக கமலகண்ணன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட ஒன்றி க்குழு தேர்வு செய்யப்பட்டது.
மேட்ரிமோனி மூலம் 50 பெண்களை ஏமாற்றியவர் கைது
சென்னை, செப்.29- சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் புகார் அளித்தார். மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்த போது ஒரு வாலிபர் தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்து, திருமண வாக்குறுதி அளித்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி தலைமறைவானார் என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வாலிபரின் கார் நம்பரை வைத்து விசாரித்தபோது திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. ஆய்வாளர் லதா தலைமையில் காவல்துறையினர் திருநெல்வேலியில் 15 நாட்கள் முகாமிட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (25) என்பவரை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரும்போது அமைந்தகரை கூவம் ஆற்றங்கரையில் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் அவரது இடது கால் முறிந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை சமாளிக்குமா சென்னை?
சென்னை, செப். 29- அடுத்த மாதம் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் தற்போது நிலவி வரும் உதவி பொறியாளர்கள் பற்றாக்குறையால் இது மிகப்பெரிய சுமையை மற்ற அதிகாரிகளுக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம், வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் உதவிப் பொறி யாளர்கள் பற்றாக்குறை கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மழைநீர் வடிகால் சீரமைப்பு, புதிய வடிகால் அமைத்தல், தூர்வாரும் பணிகள், சாலை அமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராயபுரம், திரு.வி.க. நகர், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று மண்டலங்களில் மட்டும் போதுமான ஊழியர்கள் உள்ளனர்.