tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

கரையை கடக்கிறது ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி  தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

சென்னை, செப். 3 - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்து புதனன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது அது வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை தென்தமிழக கடலோர பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், ஆந்திரா கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

கிருஷ்ணகிரி, செப். 3 - நாய் கடித்து படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் ஓசூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேகா நந்தலால் தம்பதியின் மூன்றரை வயது மகன் சத்யா ஆகியோர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள மாசிநாயகனப்பள்ளியில் ராமமூர்த்தியின் பசுமைக் குடில் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தை சத்யா தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று சிறுவனின் முகத்திலும் கையிலும் கடித்துக்குதறியது. பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.