tamilnadu

img

சிதிலமடைந்த நாட்றம்பாளையம் ஒகேனக்கல் சாலையை சீர்படுத்த வலியுறுத்தல்

சிதிலமடைந்த நாட்றம்பாளையம்  ஒகேனக்கல் சாலையை சீர்படுத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, அக். 4- ஓசூரில் இருந்து ஒகேனக்கல் செல்வதற்கு தேன்கனிக் கோட்டை அஞ்செட்டி வழியாக ஒரே ஒரு வழிச்சாலை மட்டுமே உள்ளது. இதன் வழியே ஓசூரில் இருந்து ஒகேனக்க ளுக்கு தினமும் 4 அரசுப் பேருந்துகளும், தேன்கனிக் கோட்டையில் இருந்து 2 தனி யார் பேருந்துகளும் சென்று வருகின்றன.  பெங்களூரு, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளிலிருந்து தினமும் நிறைய இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் ஒகேனக்கல் சென்று வருகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான வாகனங்களிலும் ஒகேனகல் சென்று வருகின்றனர். ஏற்கெனவே ஒரு வழிச்சாலையாக உள்ள நிலையில், தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவுகள் உள்ள மலைப்பாதையாகவும், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகவும் இச்சாலை உள்ளதால் எப்போதும் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மலைப்பாதை பகுதி கொண்டை ஊசி வளைவு பகுதியிலும், நாற்றாம்பாளையம் முதல் ஒகேனக்கல் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரையிலும் முற்றிலும் சிதிலமடைந்து வாகனங்கள் சென்றுவர கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்களும் அடிக்கடி இச்சாலையில் பயணிப்பவர்களும் வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலை துறைக்கும், அஞ்செட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் பலமுறை புகார் அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. பல மாதங்களாக இந்த சாலை கடுமையாக பழுதுபட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாட்றாம்பாளையம் அருகே 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முற்றிலும் சிதிலமடைந்துள்ள இந்த சாலையை சீர்படுத்திட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் அஞ்செட்டி வட்டக் குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இச்சாலையை சீர்படுத்த வலியுறுத்தி நாட்றாம்பாளையம் சாலையில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.