தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவின்பேரில், உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும் முதன் முறையாக பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக நீதி வரலாற்றில் ஓர் முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ள இம்முடிவை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.
பதிவாளர், முதுநிலை தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளர்கள், இளநிலை கணினி புரோகிராமர், நீதிபதி சேம்பர் பணியாளர்கள் ஆகிய பதவிகளுக்கு இனி பட்டியல் சாதி, பழங்குடியினர் இட ஒதுக்கீடு அமலாகும்.
இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இத்தகைய முடிவு உச்சநீதிமன்றத்தால் மேற்கொள்ளப்படுகிறது என்பது, இவ்வளவு காலம் எத்தகைய புறக்கணிப்பு பணி நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும், அங்கே நிகழ்ந்து வந்திருக்கிறது என்கிற கசப்பான உண்மையை சுட்டிக்காட்டுகிறது. இம்முடிவு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானதாகும்.
"அனைத்து அரசுத் துறைகளிலும், பல உயர்நீதிமன்றங்களிலும் ஏற்கனவே பட்டியல் சாதி மற்றும் பழங்குடி பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகள் உள்ளன. அப்படியிருக்க, உச்சநீதிமன்றம் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக்கான பல தீர்மானகரமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆகையால், ஒரு நிறுவனமாக அது இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். நம்முடைய செயற்பாடுகள் நம்முடைய கொள்கைகளைக் பிரதிபலிக்க வேண்டும்" என்ற அவரது கருத்து 75 ஆண்டு கால தாமதம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் சுய விமர்சனமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களிலும் இட ஒதுக்கீடு தேவைப்படுவதையே தரவுகள் காண்பிக்கின்றன. தற்போதைய முடிவு நீதிபதிகள் நியமனங்கள் குறித்த விவாதத்தையும் பொது தளத்தில் உருவாக்குமென்பதில் ஐயமில்லை.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவாத கருத்துக்களை ஒன்றிய ஆட்சியாளர்களே முன் வைத்து வரும் வேளையில் உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள இம் முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இம்முடிவை மகிழ்ச்சியுடன் பாராட்டி வரவேற்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளனர்.