tamilnadu

img

மதுரையில் பிரதமர் மோடியின் ‘வெற்று’ முழக்கங்கள் புதிய திட்டங்கள் இன்றி பழையவற்றையே ஓப்பித்த அவலம்; பாதியிலேயே வெளியேறிய தொண்டர்கள்!

மதுரையில் பிரதமர் மோடியின் ‘வெற்று’ முழக்கங்கள்புதிய திட்டங்கள் இன்றி பழையவற்றையே ஓப்பித்த அவலம்; பாதியிலேயே வெளியேறிய தொண்டர்கள்! 
மதுரை, மார்ச் 01 - தமிழகத்திற்குத் தேவையான புதிய வளர்ச்சித் திட்டங்களோ, தொழில் முதலீடுகளோ இன்றி, முழுக்க முழுக்க அரசியல் காழ்ப் புணர்ச்சி மற்றும் கலாச்சாரக் குறியீடுகளை மட்டுமே முன்னிறுத்தி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அரங்கேறியது. மெட்ரோ ரயில் மற்றும் புதிய ரயில்வே திட்டங்கள் குறித்துப் பிரதமர் திட்டமிட்டு மௌ னம் காத்தது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.  ஞாயிறன்று மதுரை வந்த பிர தமர் நரேந்திர மோடி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் வழிபாடு நடத்தினார். அவருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ. 4,400 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  அரசு விழா: பழைய திட்டங்கள் பற்றிய பெருமிதம் அரசு விழாவில் மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - இராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுப் புனர மைக்கப்பட்ட பொம்மிடி, காரைக்குடி, மணப்பாறை, மொரப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீ வில்லிபுத்தூர் மற்றும் திருவாரூர் ஆகிய ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4-வது ரயில் வழித்தடத் திட்டத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசியல் தாக்குதலும், தமிழகத்தின் மீதான அலட்சியமும் மாலையில் மண்டேலா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கினார். அன்னை மீனாட்சி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,  மருது சகோதரர்கள் ஆகியோரைப் புகழ்ந்து பேசித் தமிழக மக்களின் உணர்வுகளைக் கவரும் ஒரு  ‘அரசியல் நாடகத்தை’ அரங்கேற்றினார். இருப்பினும், அவரது உரையின் மையப்பகுதி முழுவதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சிப்ப தற்கே ஒதுக்கப்பட்டது. தமிழகத்திற்கு தேவையான புதிய தொழிற்பேட்டை கள், கல்வி நிறுவனங்கள் அல்லது பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்கள் குறித்த எந்தவொரு ஆக்கப் பூர்வமான அறிவிப்பும் இடம்பெற வில்லை. குறிப்பாக, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணி களுக்கான நிதி மற்றும் மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ திட்டங்கள் குறித்துப் பிரதமர் எவ்வித  உறுதியான அறிவிப்பையும் வெளி யிடாமல் மௌனம் காத்தது தமிழகத்தின் வளர்ச்சி மீதான அவரது அலட்சியத்தையே காட்டியது. புதிய ரயில் பாதைகள், இரட்டைப் பாதை அமைப்பு அல்லது மின்மயமாக்கல் விரிவாக்கம் குறித்து பேசாமல், கடந்த கால நிதி ஒதுக்கீ டுகளைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசி நேரத்தைக் கடத்தினார். வெறிச்சோடிய இருக்கைகள்: சிதறிய கூட்டணித் தொண்டர்கள் பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் திடீரென வெளியேறத் தொடங்கியதால் கூட்டத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தின் பின் பகுதியில் இருந்த  இருக்கைகள் அனைத்தும் காலி யாகிக் காட்சியளித்தன. கூட்டத்தின் தொடக்கத்தில் ‘தசாவதாரம்’ படத்தின் “உலக நாயகனே” பாடலும், பிரதமர் பேசுவதற்கு முன்பாக ‘படிக்காதவன்’ படத்தின் “ஒரு கூட்டுக்கிளியாக” பாடலும் ஒலிக்கப்பட்டன.  கூட்டணித் தலைவர்களின் அணிவகுப்பு இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனி சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்பு மணி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கே. அண்ணா மலை, மத்திய அமைச்சர்கள் எல். முருகன், பியூஷ் கோயல் மற்றும்  என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவர் களான ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், செல்லூர் ராஜு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சுருக்கமாகச் சொன்னால், பிரதம ரின் மதுரை உரை என்பது நடை முறை வளர்ச்சி அறிவிப்புகள் ஏதுமற்ற, வெறும் அரசியல் விமர்சனங்கள் நிறைந்த வெற்று உரையாகவே அமைந்தது. ஜல்லிக்கட்டு மற்றும் செங்கோல் குறிப்புகள் மூலம் தமிழக மக்களைக் கவர முயன்றாலும், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்த அவரது மௌனம் பாஜகவின் உண்மையான முகத்தைத் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. (ந.நி.)