மாநிலங்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்.2-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், திமுக-வில் இருந்து திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் இருந்து கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக-வில் இருந்து எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல், அதிமுக-வில் இருந்து எம்.தம்பிதுரை, பாமக-வில் இருந்து அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இத்தேர்தலில் போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடத்தில் ஏற்கனவே அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் நானே என சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 16-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
