tamilnadu

img

தங்களுக்கு அரசுப் பணி கிடைக்க போராடிய தலைவர்களுடன் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திப்பு!

சாதிய வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி கிடைக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) மாவட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில்  சாதிய வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு பணிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் பணி ஆணையை வழங்கினர்.
வேலைக்கான அரசு ஆணையைப் பெற்றவர்கள் தங்களுக்கான சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) மாவட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், தீஒமு மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார் மற்றும் எம்.ரவி, சி.கணேஷ், சி.பி.ஜெயராமன், எஸ்.ஆர்.ஜெயராமன், வெங்கடசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
• கிருஷ்ணகிரி வட்டம், கல்கேரி திம்மராயப்பா 13.05.2017 அன்று சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் மகன் குமார்க்கு அஞ்செட்டி அரசு சமூகநீதி மாணவர் விடுதியில் சமையலர் பணி வழங்கப்பட்டது.
• தேன்கனிக்கோட்டை வட்டம், கல்கேரி சுரேஷ் 19.04.2018 அன்று ஆலைய நுழைவு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியதால் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் மனைவி ராஜம்மாவுக்கு மேகலசின்னம்பள்ளி அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் சமையலர் பணி வழங்கப்பட்டது.
• தேன்கனிக்கோட்டை வட்டம், மதகொண்டப்பள்ளி சசிகுமார் தன் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாடத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டியல் சமூகத்தினரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத சாதி ஆதிக்க கும்பல் 27.06.2021 அன்று அவரை படுகொலை செய்தனர். அவரது மனைவி சுகுணாவிற்கு இராயக்கோட்டை அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் சமையலர் பணி வழங்கப்பட்டது.
இந்த மூன்று படுகொலை வழக்கிலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீதி கேட்ட போராட்டத்தையும் / சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தீருதவிகளுக்கான போராட்டத்தையும் நடத்தி வருகிறது.
தொடர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவிற்கும், போராட்டத்தில் உறுதியுடன் நின்ற வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.