tamilnadu

பெரியபாளையம் அருகே கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களாக மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகும் அவலம்!

பெரியபாளையம் அருகே கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களாக மழையில் நனைந்து  நெல்மூட்டைகள் வீணாகும் அவலம்!

திருவள்ளுர், அக்.8- பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் செம்பேடு கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாததால் கொட்டும் மழையில் நனைந்தபடி விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு காதர்வேடு, வெங்கல, மேல்செம்பேடு, செம்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒரு பருவத்திற்கு சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சுமார் 20 டிராக்டர்களில் நெல் மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், வண்டி வந்தால் மட்டுமே வாங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கோணி பைகள், சணல் கயிறுகள் இல்லை என்று கூறி நெல் மூட்டைகளை வாங்க மறுத்துள்ளனர். இதனால் நெல் மூட்டைகள் 10 நாட்களாக டிராக்டர்களிலேயே கொள்முதல் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ளன.  கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து, நாற்று வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிராக்டர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1000 வாடகை செலுத்த வேண்டியுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரி, கொட்டும் மழையில் நனைந்தபடி விவசாயிகள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.