tamilnadu

img

தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் பாஜக-அதிமுக இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் வடக்கு தொகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையில் அம்பத்தூர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில்,“தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வு மூலம்பறிக்கப்பட்டது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை” என்றார். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது. அப்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.


காவிரிப் பாசனப் பகுதிகளை முழுமையாகப் பாலைவனம் ஆக்கும் வகையில் மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷெல்(கேஸ்) எரிவாயு போன்ற நாசக்காரத் திட்டங்களை அமல்படுத்த துடிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாநில உரிமையை நசுக்கும் மத்திய பாஜக ஆட்சியையும், பாஜகவின் ஊதுகுழலாக திகழும் அதிமுகவையும் விரட்டியடிக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். வேட்பாளர் டி.ஆர்.பாலு,“ இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் அம்பத்தூர் டிஐ சைக்கிள் அருகே உள்ள மேம்பாலத்தை விரிவுபடுத்துவேன், அம்பத்தூர் ரயில் நிலையம் 4ஆவது முனையமாக மாற்றப்படும் என உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, காங்கிரஸ் கட்சியின் பீர்முகமது, சிபிஎம் தொகுதி செயலாளர் சு.பால்சாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், விசிக மாவட்டச் செயலாளர் கௌரிசங்கர், மதிமுக தொகுதி பொறுப்பாளர் தாமோதரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;