tamilnadu

img

ஆசிரியர் பற்றாக்குறையால் இலங்கை தமிழர் முகாம் பள்ளி மாணவர்கள் அவதி

ஆசிரியர் பற்றாக்குறையால் இலங்கை தமிழர் முகாம் பள்ளி மாணவர்கள் அவதி 


திருவள்ளூர், மே 11- கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை புலம்பெயர் தமிழர்களின்  திறந்தவெளி முகாமில் உள்ள நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரை நியமித்து கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக இங்கு அமைக்கப்பட்ட திறந்தவெளி முகாமில் 928 குடும்பங்களில்,  2 ஆயிரத்து 886 பேர் வசிக்கின்றனர். அகதிகளின் குழந்தைகள் கல்விபயில  இம்முகாமில் நடுநிலைப் பள்ளி துவங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே 1200 மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்று வந்தனர். வட்டார கல்வி அதிகாரியால் 7 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.  பின்னர் 2012 ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 486 ஆக குறைந்தது. தற்போது பட்டதாரி ஆசிரியர் ஒருவர், இடைநிலை ஆசிரியர் ஒருவர் எஸ்எம்சி - யின் மூலம் இரு ஆசிரியர்கள் உள்ளனர்.  

தகரத்தால் வகுப்பறைகள்

2015 ஆம் ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. வகுப்பறைகள் தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளதால் வெயில் காலத்தில் உள்ளே அமர்ந்து படிக்க முடியாதநிலை உள்ளது. மழை காலத்திலும் நிம்மதியாக படிக்க முடியாது என்கிறார்கள்.  ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாணவர்கள் அருகில் உள்ள பெத்திக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு  செல்ல ஆரம்பித்தனர். ஆங்கில வழி கல்வி முறையை கொண்டு வந்தாலும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், முகாம் பள்ளியை விட்டு வெளியேறி,  தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்தனர்.  ஆரம்பத்தில் அகதி முகாமில் உள்ளவர்கள் வெளியே வேலைக்கு எங்கும் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. பின்னர் வீட்டில் உள்ள இருவரும் வேலைக்கு செல்வதால் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க துவக்கியுள்ளனர். இதனால் முகாமில் உள்ள பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அகதிகள் முகாமில் உள்ள  நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது இந்த பள்ளியில் 83 மாணவர்கள்  கல்வி பயின்று வருகின்றனர். இங்கு காலை உணவு, மதிய உணவு, நோட்டு, புத்தகம், சீருடை தொடர்ந்து அரசு வழங்குகிறது. மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்ய சென்றபோது அவரிடம் பள்ளி நிலைமை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

முகாமில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவிக்கையில்,  கடந்த 35 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டவில்லை. உடனடியாக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கு என பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தகரத்தால் ஆன மேற்கூரைகளை அகற்றி விட்டு கான்கிரீட் வகுப்பறைகளை அமைத்து கொடுக்க வேண்டும், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கழிவறைகளை சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்து, பள்ளியின் கட்டுமானத்தை வலுப்படுத்தினால் மாணவர்கள் சேர்க்கை பல மடங்கு அதிகரிக்கும். அனைத்து மாணவர்களும் வெளியே சென்று கல்வி கற்பதை தவிர்க்க முகாம் பள்ளியை மேம்படுத்த அரசும், அதிகாரிகளும் உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.            - பெ.ரூபன்