மின்னல் தாக்கி மாணவர் படுகாயம் வீடு மற்றும் மின்சாதனங்கள் சேதம்
சிதம்பரம், அக். 4- சிதம்பரத்தில் இடி,மின்னல் தாக்கி மாணவர் படுகாயம் அடைந்ததுடன் வீடுகளில் மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமானது. சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை(அக்.4) அதிகாலை 5 மணிக்கு மின்னல் மற்றும் இடியுடன் மழை பெய்தது. அப்போது, சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட சிவசக்தி நகரில் 3-வது குறுக்கு சாலையில் உள்ள ஜான்பாஷா என்பவர் வீட்டின் இரண்டாவது தள வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நதியா, அவரது மகன் அகிலன், அவரது மகள் காயத்ரி ஆகியோர் வசித்து வருகின்றனர். மூன்று பேரும் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவரது வீட்டின் டிவி ஆன்டனா மீது மின்னல் தாக்கியதால் மின்விளக்கு ஒயர் மூலம் வீட்டிற்குள் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இடி மின்னல் தாக்கியதால் வீடு முழுவதும் இருந்த மின் ஒயர்கள், ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்டவை எரிந்துள்ளது. அதேபோல் மின் விசிறி, மின் மோட்டார், டிவி, வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களும் பழுதானது. அதேபோல் இதன் அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மோட்டார், டிவி, ஏசி, மின் மீட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி உள்ளது. இது குறித்து வருவாய்த் துறை மற்றும் மின் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
