tamilnadu

img

ஒப்பந்த முறையில் முதலில் பலியாவது சமூகநீதி!

சென்னை, ஜூலை 3- ஒப்பந்த முறையை அமல்படுத்து வதால் முதலில் பலியாவது சமூக நீதிதான் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறி னார். சென்னை மாநகராட்சியில் ஆண்டுக் கணக்கில் பணிபுரியும் தூய்மை, சுகாதார பிரிவு உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் மாநில தலைவர் கு.பாரதி கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போராட்டத்தை வாழ்த்தி அ.சவுந்தரராசன் பேசுகையில், சத்துணவு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு? ஆஷா தொழி லாளர்களுக்கு மாதம் ரூ.1000 கூட ஊதியம் கிடையாது. பொதுத்துறை நிறுவனங்களில், உள்ளாட்சிகளில் இனிமேல் அனைத்து வேலைகளும் அவுட் சோர்சிங் விடப்படும் என அறி வித்து விட்டார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு வரை கூட நிரந்தர பணியில் அமர்த்த மாட்டோம், அனைத்தும் அவுட்சோர்சிங் என்று அறிவித்து விட்டார்கள்.

இப்படி ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிக வேலை நேரம், குறைந்த ஊதியம் என்பதை அமல்படுத்த அரசு முயற்சிக்கிறது. ஒப்பந்த முறை யில் முதலில் பலியாவது சமூக நீதி என்பதை மறந்து விடக்கூடாது. நிரந்தர தொழிலாக இருந்தால் அதில் ஒப்பந்த முறை கூடாது என்றும், நிரந்தர தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், ஒருவேளை ஒப்பந்த தொழி லாளர்களை நியமித்தால் நிரந்தர தொழிலாளிக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.

ஆனால் அப்படி வழங்கப்படுகிறதா?   1977ஆம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சிகளில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. நீதி மன்றத்தை நாடியவுடன் 2016இல் ஒரு குழு அமைத்தார்கள். அந்த குழு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யலாம் என பரிந்துரை செய்தது. இதையடுத்து குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிற புதிய அரசாணையின் மூலம் அந்த குறைந்தபட்ச ஊதியம் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் நீதி மன்றத்திற்கு சென்ற போது புதிய அரசாணை 36க்கு தடை விதிக்கப்பட்டு, அரசாணை 62ஐ அமல்படுத்த வேண்டும் என நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அப்போது அதை அமல்படுத்தவில்லை. மாறாக மாவட்ட ஆட்சியர் ஒரு குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்வார், அதேபோல் குடிநீர் வாரியம் ஒரு குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்யும். அப்படி நிர்ணயம் செய்யப்படும் ஊதியங்களில் எது குறைந்ததோ அது வழங்கப்படும் எனக் கூறு கிறார்கள். எந்த போராட்டமும் வீண் போனதில்லை.

இதுவரை பெற்ற அனைத்து சலுகைகளும் போராடி பெற்றதுதான் என்பதை மறந்து விடக்கூடாது. அதுபோல் இந்த போராட்டம் வெற்றிபெற சங்க வித்தியாமின்றி அனைவரும் தொழி லாளி வர்க்கம் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே சமூக நீதியை, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்று சவுந்தர ராசன் கூறினார். இதில் நிர்வாகிகள் சு.பால்சாமி, ஆர்.கோபி, கே.சீனிவாசன், ரோசய்யா, யாகூப், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகி ஏ.எஸ்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;