சீமான், மகளிர் அமைப்புகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாதர் சங்கம், மகளிர் அமைப்புகள் நியாயம் கேட்கவே இல்லை என மிகவும் மோசமாக, பொதுவெளியில் பேசத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருந்தார்.
இதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பலரும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்(AIDWA) ரிதன்யாவிற்கு நீதி கேட்டு நடத்திய போராட்ட செய்திகளை இணையத்தில் பகிர்ந்து சீமானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சீமானின் இந்த அவதூறு பேச்சுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான உ.வாசுகி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
சீமானுக்கு அம்னீசியாவா? அல்லது 100 வருடம் தூங்கியவராகப் புனைவு செய்யப்பட்ட ரிப் வான் விங்கிளா? . உங்கள் தரத்துக்கு இறங்க விருப்பமில்லை.
எங்கள் கட்சி நாகரீகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது..ரிதன்யா உட்பட பலப்பல வரதட்சணை கொடூரங்களைத் தட்டிக் கேட்ட வரலாறு எங்களுக்குண்டு.. உங்களுக்கு? என பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.