வீடுகட்டும் திட்டத்தில் தரமற்ற கட்டுமானம் பேச்சுவார்த்தையால் போராட்டம் ஒத்திவைப்பு
கடலூர், ஜூலை 22 - இலவச வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பணிகள் தரமாக நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூர் ஊராட்சி மன்றத்திற்கு கட்டப்பட்டது ராஜ கணபதி நகர். இங்கு வசித்து வரும் மலை குறவன் சமூகத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 5 குடும்பத்திற்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை ஒப்பந்ததாரர் சேகர் கட்டி வருகிறார். கட்டுமானப்பணி தரமற்ற முறையில் இருப்பதாகவும் கேள்வி கேட்ட பயனாளிகளை அவர் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத் திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்கக் கோரி ஜூலை 22 அன்று காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, பண்ருட்டி வட்டாட்சியர் தலைமையில் சமா தான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொறியாளர், வருவாய்த் துறையினர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.பன்னீர், கே.முருகன், காசி.லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தை தொடர்ந்து, கட்டு மான பணியை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஒப்பந்ததாரர், பாதிக்கப்பட்ட பயனாளிகளை அழைத்து பேசி தரமான முறையில் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.