ஆந்திர பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் காவலர்களை கண்டித்து திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, அக். 2- ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த பெண்ணை காவலர்கள் இருவர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றச் செயலில் ஈடுபட்ட காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, துறை ரீதியாக பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். அந்த பாதக சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலையில் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை(அக்.2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்தையும் ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி. கவுரி, பி. தமிழ்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். வழக்கறிஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அபிராமன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. எம். பிரகாஷ், மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். சுகுணா ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், வட்டார செயலாளர் அண்ணாமலை, மாதர் சங்கம் கே. வாசுகி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.ஸ். குமாரி திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோ கன்ஃபரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பாதுகாப்பு தரக்கூடிய காவலர்களே இது போன்ற தவறுகளில் ஈடுபடும்போது அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவும், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு ஆறு மாத காலத்தில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் இருவரும் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
