100 நாள் வேலை திட்ட ஊதியம் வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்
புதுச்சேரி, அக்.13 – 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு ஊதியத்தை உடனே வழங்கக் கோரி வில்லியனூரில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் நூறுநாள் வேலையை 200 நாள்களாகவும், நாளொன்று கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பணி முடித்த 15 நாட்களில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும், காலதாமதமாக வழங்கும் ஊதியத்திற்கு சட்டப்படி வட்டியுடன் சேர்த்து ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தி நலத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும் என்றும் போராட்டத்தில் கோரப்பட்டது. 8.8.2024 அன்று சேந்தநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைத்தளத்தில் உயிரிழந்த தொழி லாளி முனுசாமி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வில்லியனூர் கமிட்டி செயலாளர் இன்னரசு தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி அகில இந்திய விவசாய சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ராமமூர்த்தி பேசினார். சங்க நிர்வாகிகள் விநாயகம், அரிதாஸ், மங்களக்ஷ்மி, சிவசங்கரி உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக வில்லியனூர் ஏழை மாரி யம்மன் கோவில் அருகில் இருந்து ஊர்வல மாக வந்த விவசாய தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்ட முடிவில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி இரண்டு நாளில் வேலை செய்த மக்களுக்கு சம்பளத்தை வழங்க ஏற்பாடு செய்வதாகவும், தீபாவளி முடித்து அனைத்து பஞ்சாயத்துக்களிலும் 100 நாள் வேலை கொடுப்பதற்கான வாக்குறுதியும் கொடுத்தார்.
