tamilnadu

img

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு... இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்....

சென்னை:
பொதுக் காப்பீட்டு நிறுவனங் களை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 4 அன்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுத்துறையில் இயங்கி வரும் நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பொதுக்காப்பீட்டு வர்த்தகம் (தேசியமயம்) திருத்தச் சட்ட முன்முடிவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.
அதாவது, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு வைத்திருக்க வேண்டும் என்ற பிரிவை நீக்கியுள்ளனர். இதன் மூலம் 100 சதவீத பங்குகளை தனியாரிடம் விற்க முடியும்.இந்நிலையில் ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மாநிலங் களவையில் பொதுக்காப்பீடு வர்த்தகம் (தேசியமயம்) திருத்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய கூடாது என வலியுறுத்தி புதனன்று (ஆகஸ்ட் 4) பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.17 சங்கங்களை உள்ளடக்கி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் 7850 கிளைகளில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:19.5 கோடி ரூபாய் முதலீட்டில் ஒன்றிய அரசு தொடங்கிய பொதுத்துறை பொதுஇன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ளன. ஒன்றிய அரசு இந்நிறுவனங் களுக்கு எந்த ஒரு நிதியுதவியும் செய்யத் தேவையில்லை. நிறுவனத்திற்கு உள்ள தன்னாட்சி அதிகாரத்தை பயன்படுத்த அனுமதித்தாலே போதும்.

பொதுக்காப்பீடு வர்த்தகம் (தேசியமயம்) திருத்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் விரைவில்தாக்கல் செய்ய உள்ளது. அதைகைவிட வேண்டும். இந்த திருத்தத்தின் வாயிலாக நிறுவனம் தனியார்மயமாகும். ஊழியர்களின் வேலை மற்றும் இடஒதுக்கீடு பறிபோகும்.50 கோடி சாமானிய மக்களுக்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் காப்பீடு கொடுத்துள்ளன. இந்தியாவில் 27 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும், கிராமப்புறங்களில் அவை சேவை வழங்குவதில்லை.கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அரசு எந்த ஒரு நிதியுதவியும் தர முடியாது என்கிறது. ஆனால், 12 ரூபாய் கொடுத்து இன்சூரன்ஸ் செய்துவிட்டு கொரோனாவில் இறந்தால் அவருக்கு பொதுஇன்சூரன்ஸ் நிறுவனங்கள் 2 லட்சம்ரூபாயை தருகின்றன. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு தருவதில்லை.தாராளமயத்திற்கு எதிராக உலக நாடுகள் முடிவெடுத்து வரும் நிலையில் துருப்பிடித்த நவீன தாராளமய கொள்கையை ஒன்றிய அரசு பேசிக்கொண்டிருக்கிறது. மாநிலங்களவையில் பொது இன்சூரன்ஸ் திருத்த மசோதாவை கொண்டு வந்தால் போராட்டம் தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆதரவு போராட்டம்
பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, சென்னை அண்ணாசாலை யில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு, காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், சென்னை பகுதி-1 இன்சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. 

;