எம்எல்ஏ-வுக்கு கொரோனா
ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இறைச்சி கடைகளுக்கு சீல்
சென்னையில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் 59 பேருக்கு தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1154ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 113 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3733 ஆக உயர்ந்துள்ளது.
15 நாளாக விலை உயர்வு
சென்னையில் 15வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா உயர்த்தப்பட்டு 82.58 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்த்தப்பட்டு 75.80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த 15 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 7.04 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7.58 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
முறைசாரா கிளை உதயம்
சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் (தென்சென்னை) புதிய கிளை ஆயிரம் விளக்கு பகுதி 109 வது வட்டம், நமச்சிவாயபுரத்தில் உதயாமாகி உள்ளது. கிளைத் தலைவராக மாகலஷ்மி, செயலாளராக லஷ்மி, பொருளாளர் சரண்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு படை: 6 பேருக்கு தொற்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியருக்கு தொற்று
பூவிருந்தவல்லி துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
தி.மலையில் 1086 பேருக்கு தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1086ஆக உயர்வடைந்தது.
சாராய ஊறல் அழிப்பு...
வேலூர் மாவட்டம் அரியூர் அருகே வெள்ளக்கல் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
கட்டுப்பாடு...
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல், மதியம் 3 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளளது.
கடலூரில் 4 பேர் உயிரிழப்பு...
கடலூர் மாவட்டம் கோண்டூரைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது.
ரத்ததான முகாம்...
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கடலூரில் இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கைது...
தேன்கனிக்கோட்டை பிரசாத் தெருவை சேர்ந்த நபிஜான் (44) தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுவையில் தொற்று 369...
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.