விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் கோரி பாகூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, செப்.16- விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் கேட்டு பாகூர் வட்டாட்சியர் அலு வலகம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.2.50 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆண்டிற்கு 100 நாட்களுக்கும் முழுமையாக வேலையை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சம்பளமாக ரூ.336 ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.1,000 வழங்க வேண்டும். விபத்தில் இறக்க நேரிடும் விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பாகூர் கமிட்டி தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில பொதுசெயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பாகூர் கமிட்டி செயலாளர் அரிதாஸ், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சரவணன், சிஐடியு மாநில நிர்வாகி கலியன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். சங்க நிர்வாகிகள் செல்வராசு, முருகையன், பானுமதி, வளர்மதி உட்பட திரளான விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, பாகூர் தீயணைப்பு நிலை யத்திலிருந்து ஊர்வலமாக வந்தவர்கள் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கி னார்கள். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் அரசுக்கு இதுகுறித்து அனுப்பி வைப்பதாகவும், வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.