விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கல் நட்டு மாபியா கும்பல் அட்டூழியம்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர், ஆக.28- தாண்டவராயன்பாளையத்தில் விவ சாயிகளின் நிலத்தில் சட்ட விரோதமாக இறங்கி கல் நட்ட நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட தாண்டவராயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 21 விவசாயிகளின் பட்டா நிலங்களை 2 வாரங்களுக்கு முன்பு சிலர் வந்து சட்ட விரோதமாக தலை யாரி மதன் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்து, எல்லை கல் பதித்த னர். ஏன் எங்கள் நிலத்தில் அளவீடு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் வருவாய் துறை அதிகாரிகள், தடுத்தால் பணி செய்யும்போது தடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். இத னால் விவசாயிகள் செய்வது அறியாமல் சென்றுள்ளனர். பின்னர் ஞாயிறு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவருமான ஜி.வி.எல்லைய்யனிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளனர். அவர் விசாரித்த போது, அதுபோன்று எந்த நிலஎடுப்பு நடவடிக்கையிலும் வருவாய்த் துறையினர் சார்பில், அரசு அதிகாரிகள் ஈடுபடவில்லை என தெரிய வந்தது. எந்தவித எழுத்து பூர்வமான அறிக்கையும் விவசாயிகளுக்கு தராமல், விவசாயிகளின் நிலத்தில் எந்த ஒப்புதலும் இல்லாமல் இறங்கியதும், நிலத்தை அளவீடு செய்ததும், நிலத்தில் சர்வே கல் பதித்ததும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி சட்டத்துக்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமிக்க வந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் வியாழனன்று (ஆக.28), விவசாயிகள் சோழவரம் காவல் நிலை யத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் புகாரை ஏற்க மறுத்தனர். கடும் வாக்குவாதத்திற்கு பிறகு புகார் மனுக்களை வாங்கினர். சிஎஸ்ஆர் கொடுப்பதாக முதலில் கூறிய ஆய்வாளர் பிறகு சிஎஸ்ஆர் தர மறுத்துவிட்டார். விவசாயிகளின் நிலங்களை சட்ட விரோதமாக அளந்து கல் நட்ட மாபியா கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.வி.எல்லையன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.