கனக்கம்மாசத்திரம் நகரரை வெள்ளம் சூழும் அபாயம் மழை நீர்கால்வாயை அடைக்கும் நெடுஞ்சாலைத்துறை
திருவள்ளூர், செப் 16- கனக்கம்மாசத்திரம் நகரத்தை வெள்ளத்தால் மூழ்கடிக்கும் வகையில் மழைநீர் கால்வாயை அடைக்கும் நெடுஞ்சாலைத்துறையின் அராஜக செயலை கண்டித்து ஊர்வலமாக சென்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கனக்கம்மாசத்திரம் நகரத்தை துண்டிக்கிற வகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை அமைத்து வருகிறது. மேலும் 150 அடி நீளமுள்ள கால்வாயை மூடி பாசன வசதியையும் தடுத்துள்ளது. கால்வாய் அடைக்கப்பட்டதால் கனகம்மாசத்திரம் நகரம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. ராமஞ்சேரி கால்வாயும் அடைக்கப்பட்டதால், 200 ஏக்கர் விளைநிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை கண்டித்தும் உடனடியாக உரிய நடவடிக்கை கோரி செவ்வாயன்று (செப் 16), ஊர்வலமும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் , தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்த இயக்கம் நடைபெற்றது. வியாபாரிகள் சங்கத் தலைவர் செஞ்சய்யாச தலைமையில் நடைபெற்ற இயக்கத்தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பெருமாள் துவக்கி வைத்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிரிநாத், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல் அகமது நிறைவு செய்தார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கனக்கம்மாசத்திரம் ஐஒபி வங்கி அருகிலிருந்து காவல்நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.