tamilnadu

img

பிரதமருக்கு கடிதம் எழுதியது தேசத் துரோக குற்றமா?

சென்னை:
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை?விடுத்த கலைஞர்கள், அறிஞர்கள் மீதுதேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,“ஜனநாயக நாட்டில், கருத்துஉரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளமா கும். இத்தகைய போக்கை பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்,“ இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், நாட்டின் உயர்பொறுப்பில் உள்ள பிரதமருக்கு கடிதம் எழுதி தங்களது கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு. அத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் தனது அலுவலக வாயிலாக பதில் அனுப்புவது கடமையாகும். ஆனால் இன்று பிரச்சனை தலைகீழாக உள்ளது மட்டுமல்ல, மிக அபாயகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்திவழக்கு பதிவு செய்திருப்பது என்பதுஎந்த ஒரு ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை. நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லதுசர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் திரும்ப பெற வேண்டும்.” என கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,“கும்பல் படுகொலைகள் குறித்து கவலையை வெளிப்படுத்தி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆங்கிலேயர் ஆட்சியில் அந்த ஆட்சியை விமர்சித்துப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் மீது எந்த தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படுமோ அதே வழக்கு விடுதலை பெற்ற இந்தியாவில் 49 பிரபல குடிமக்கள் மீது 
சுமத்தப்பட்டிருப்பது நாடு ஒரு அபாயகரமான திசையில் சென்றுக் கொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்று எச்சரித்துள்ளார். 

இயக்குநர்கள்
‘பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு என்பது மிகவும்வருத்தமானது. கடிதம் எழுதுவதில் என்ன தேசதுரோகத்தை பார்த்தீர்கள்?’ என்று இயக்குநர் ராஜிவ் மேனன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஜனநாயக முறையிலும் நாகரீக முறையிலும் விடுக்கப்பட்ட கோரிக்கை. தங்களுடைய சமூக பொறுப்பை தான் அவர்கள் செய்தார்கள்’ என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

;