tamilnadu

img

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை...தமிழக அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை 

சென்னை 
10,11,12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. முதலில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது.  

இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டம் மற்றும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிக்கும் பள்ளிகளுக்கான அரசு பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து அரசு தேர்வுத்துறை விளக்கம் அளித்து உள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உ‌ஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
* தேர்வு எழுதும் அறையில் புத்தகம், நோட்ஸ், துண்டு சீட்டு (பிட்) போன்றவைகளை வைத்திருந்து தானாக முன்வந்து கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தால் அவரிடம் கண்காணிப்பாளர் விளக்கம் எழுதி வாங்குவார்.

* தேர்வர் மற்றொரு தேர்வரைப் பார்த்து காப்பி அடித்தாலோ அல்லது தேர்வு அறையில் இருந்தோ, வெளியில் இருந்தோ வேறொருவரிடம் இருந்து உதவி பெற்றாலோ அந்த தேர்வில் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், அந்த செயலை செய்யும் நபர் ஓராண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்.  

* தேர்வு துறையால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் இதர ஆவணங்களைக் கொண்டு காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பகுதிக்கான மதிப்பெண் ரத்து செய்யப்படுவதோடு, தேர்வர் அடுத்த 2 ஆண்டுகள் தேர்வுகளை எழுதவும் தடைசெய்யப்படுவர்.

* ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தேர்வர் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்படும்.

* வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது கண்டறியப்பட்டால், தேர்வுக்கான தகுதிநீக்கம் செய்யப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்குத் தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும்.

* விடைத்தாளில் வரிசை எண்ணை மாற்றிக் குறிப்பிட்டுக் கொடுத்தாலோ, மற்ற தேர்வரின் விடைத்தாள்களை மாற்றிக்கொள்வது கண்டறியப்பட்டாலோ அவர் தகுதிநீக்கத்துடன் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாமல் தள்ளிவைக்கப்படுவார்.
* வினாத்தாளில் விடை எழுதி மற்றொரு தேர்வருக்குத் தூக்கி எறிவது கண்டறிந்தால், அந்த தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;