உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் கேங்மேன் ஊழியர்கள்: நியாயத்திற்கான காத்திருப்புப் போராட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடுமையான பணியாட்கள் பற்றாக்குறை நிலவிய நிலையில், அதிமுக அரசு 2019ல் நேரடியாக களஉதவியாளர்களை நியமிப்பதற்குப் பதில் ‘கேங்மேன்’ எனும் புதிய பதவியை உருவாக்கி தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நடைமுறையை எதிர்த்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (CITU) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போதிலும், மின்வாரியம் தொடர்ந்து நியமன நடவடிக்கைகளை மேற்கொண்டது. மின்ஊழியர் மத்திய அமைப்பும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நேரடி பயிற்சி அளித்து, வலுவான போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக, முதலில் 5,000 பேர் மட்டுமே நியமிக்கப்படுவதாக அறிவித்த மின்வாரியம், 10,000 பேரை 2021ல் பணியமர்த்தியது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் காரணமாக மீதமுள்ள 5,000 பேரை நியமிக்க முடியவில்லை. திமுக அரசு பதவியேற்ற பின், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீதமுள்ளவர்களையும் நியமிப்பதாக அறிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் கரைந்துவிட்டது. துயரமான யதார்த்தம் ஐந்தாம் வகுப்பு கல்வித்தகுதி மட்டுமே அவசியம் என அறிவித்த போதிலும், பிஇ, டிப்ளமோ, ஐடிஐ, இளங்கலை, முதுகலை படித்தவர்கள் வேலையின்மை காரணமாக விண்ணப்பித்து தேர்வானார்கள். தற்போது 9,613 கேங்மேன்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.15,000 மாத ஊதியத்தில், சொந்த மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மின்சாரம் செல்லாத இடங்களில் மட்டும் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை காகிதத்தில் மட்டும் உள்ளது. நடைமுறையில், போதிய பாதுகாப்புப் பயிற்சி இன்றி ஆபத்தான மின்பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் கொடூரமான விளைவு: இதுவரை 75க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். களஉதவியாளர்கள் செய்யும் அதே பணிகளைச் செய்தாலும், இவர்களுக்கு இணையான ஊதியமோ, பதவி உயர்வு வாய்ப்புகளோ மறுக்கப்படுகின்றன. சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படை நீதியே நடைமுறைப்படுத்தப்படவில்லை. கோரிக்கைகளும் போராட்டமும் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் மின்ஊழியர் மத்திய அமைப்பு, கடந்த ஆகஸ்ட் 8-10 தேதிகளில் கடலூரில் நடைபெற்ற 18வது மாநில மாநாட்டில் வலுவான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 7, 2025 அன்று மண்டல பொறியாளர் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கைகள்: கேங்மேன் ஊழியர்களை நேரடியாக கள உதவியாளர்களாக நியமித்தல்; சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம்; கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு உள்முகத் தேர்வில் வாய்ப்பு; 2019-2023 முதல் மறுக்கப்பட்ட 6% ஊதிய உயர்வு; மீதமுள்ள 5,000 கேங்மேன்களை உடனடியாக நியமித்தல் ஆகியவை ஆகும். மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி கோரிக்கைகளைப் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. சொந்த உற்பத்தியைப் பெருக்காமல், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் கொள்ளை முறையை நிறுத்த வேண்டும். தமிழக அரசு மின்சாரம் வாங்குவதில் இடைத்தரகர் போல் செயல்படக்கூடாது. கேங்மேன் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசும் மின்சார வாரியமும் உடனடியாக தீர்க்க முன்வர வேண்டும். மனித உயிர்களைப் பணயம் வைத்து இனியும் அலட்சியம் காட்ட முடியாது.
