விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியதாவது:
“முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.21.000/-லிருந்து ரூ.22,000/-ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு குடும்ப ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.11,500/-லிருந்து ரூ.12,000/-ஆகவும் உயர்த்தி வழங்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.
மேற்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.27,63,750/- (ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து அறுபத்தி மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இந்த ஓய்வூதிய உயர்வானது 15.08.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.