tamilnadu

img

திருடு போன நகைகளை 15 வருடமாகியும் மீட்காத காவல்துறை திருநாவலூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருடு போன  நகைகளை  15 வருடமாகியும் மீட்காத காவல்துறை திருநாவலூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

கள்ளக்குறிச்சி, அக்.14- திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 22.10.2010ல் விவசாயிகளின் நகைகள் திருடு போன சம்பவத்தில் 15 ஆண்டு காலமாக வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கும் கூட்டுறவு சங்க அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வி.ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 100 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 5000 மேற்பட்ட விவசாயிகள் கணக்கு வைத்து வைப்பு தொகை வைத்துள்ளனர். மேலும், நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடந்த 2010 வங்கியில் விவசாயிகள் அடகு வைத்த 14 கிலோ எடை கொண்ட 1,790 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கை 2012 ஆண்டு வணிக குற்ற புலனாய்வு பிரிவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கினர். குறிப்பாக எதிரிகள் மீது குற்ற பத்திரிகை தயார் செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை விவசாயிகளின் நகைகள் மீட்கப்படவில்லை அவற்றுக்கான நிவாரணமும் விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை மேலும் இந்த வழக்கை நீதிமன்றத்தில் இழுத்தடித்து கால தாமதம் செய்து வரும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு மாலையிட்ட எருமை மாட்டியிடம் மனு கொடுத்து கண்டன முழுக்கம் எழுப்பினர் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டாததால் மீண்டும் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில் கூட்டுறவுத் துறை சார்பில் திருக்கோவிலூர் சரக துணை பதிவாளர், திருநாவலூர் திருடு தொடர்பான வழக்கினை நடத்தி வரும் அமைப்பு சார்பாக கரு திருமாறன், உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு நகையை இழந்த உறுப்பினர்களுக்கு கோரிக்கையினை பரிசீலனை செய்யவது தொடர்பாக வரும்5 வெள்ளிக்கிழமை(அக்.24) கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்படும் என தெரிவித்தனர். அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் தங்க மாவட்ட தலைவர் டி.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கே.அய்யனார், ஒன்றிய தலைவர் ஆர்.முருகதாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கியதாஸ், ஒன்றிய பொருளாளர் எஸ்.சிவகாண்டம், ஒன்றிய துணை செயலாளர், ஐ.திருமலைவாசன், திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ், மற்றும் நகைகளை இழந்த பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.