tamilnadu

img

வைரமுத்து சாதி ஆணவப்படுகொலை – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து (28) சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தை கண்டித்து நாளை (செப்.17) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அறைகூவல் விடுத்துள்ளது.

மேலும், சாதி ஆணவப்படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்; வைரமுத்துவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்; குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் S.கார்த்திக்,  மாநிலச் செயலாளர் AV. சிங்காரவேலன் ஆகியோர்  விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி பின்வருமாறு:

மயிலாடுதுறை அருகேயுள்ள அடியாமங்கலம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார், ராஜலட்சுமி ஆகியோரி மகன் வைரமுத்து டிப்ளமோ பட்டத்தாரி(DME)  அதே பகுதியில் வசித்து வரும் குமார், விஜயா இவர்களின் மகள் மாலினி எம்பிஏ பட்டதாரி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

வைரமுத்து மயிலாடுதுறை பெரிய கோயில் கீழ வீதியில் உள்ள இருசக்கர வாகன மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். மாலினி சென்னை தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி மாலினியின் உறவினர் இல்ல விழாவிற்கு வந்துள்ளார் . மாலினியின்  பெற்றோர்கள் உடனடியாக திருமண ஏற்பாடு செய்துள்ளனர் . அதற்கு மறுப்பு தெரிவித்து,  நான் வைரமுத்துவை தான் காதலிக்கிறேன் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்திருக்கிறார். இதனால் மாலினியின் அம்மா மற்றும் அவரது சகோதரர்கள் குகன், குணால் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இனிமேல் இங்கு இருந்தால் வேறு யாரையாவது அவசர திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என பயந்து தான் பணியாற்றுகிற சென்னைக்கு புறப்படுவதற்கு ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கே தனது காதலன் வைரமுத்துவை  வரச்சொல்லி  பார்த்து விட்டு, நடந்த நிகழ்வை அவரிடம் தெரிவித்து விட்டு  செல்லலாம்  என்று  வைரமுத்துவிற்கு போன் செய்து ரயில் நிலையம் வரவழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாலினியின் சகோதரர் குணால் மாலினியை  கடுமையாக தாக்கியுள்ளார்.  தாக்குவதை கண்டு வைரமுத்து மாலினிக்கு போன் செய்துள்ளார். போனை எடுத்த குணால் வைரமுத்துவையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு எனது அக்காவோடு நீ பேசினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் இதை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.  இதை கேட்ட  மாலினியின் தாய் விஜயா, வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று கடுமையாக திட்டியதோடு வைரமுத்துவை தாக்கியுள்ளார் . (அவரை தாக்கி மிரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது)

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு காவல்துறை  மாலினியை அழைத்து விசாரித்த போது நான் கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்துவை காதலித்து வருகிறேன் அவரும் என்னை காதலிக்கிறார், நான் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்னை அவருடன் திருமணம் செய்து வையுங்கள் என்று தெரிவித்துள்ளார் . மேலும் என் தாய் தந்தை மற்றும் சகோதரர்கள் குணால் குகன் இவர்களுடன் அனுப்பி வைத்தால் என்னை கொன்று விடுவார்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த 12/09/2025 அன்று காவல்துறை விசாரணைக்கு பிறகு வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது மாலினியின் தாய் மற்றும் அவரது சகோதர்கள்  இனி எங்களுக்கும் பெண்ணுக்கும் எந்த உறவும் இல்லை . எங்கள் வீட்டில் எந்த நிகழ்வுகளுக்கும் அவர் வரக்கூடாது என்று தெரிவித்து எழுதிக் கொடுக்கும்படி கேட்டதோடு மட்டும் இல்லாமல் நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில்  சென்னையில் தான் வேலை செய்த இடத்தில் இருந்த சான்றிதழ்களை எடுத்து வருவதற்காக  செப்டம்பர் 15 அன்று காலை மாலினி சென்னை சென்ற நிலையில் அன்று இரவு சுமார் 10:30 மணி அளவில் வைரமுத்து பணிகளை முடித்துவிட்டு தனது வீட்டிக்கு  சென்ற போது வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன் , குணால் உள்ளிட்ட நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும் மாலினியின் தாயார் மாற்று சமூகமான செட்டியார்  சமூகத்தை சார்ந்தவராக இருப்பதால் தனது மகளை தனது சொந்த சாதியில் திருமணம் செய்து வைப்பதற்கு இடையூறாக வைரமுத்துவை கருதி அவரை தனது மகன்கள் மூலம் கொலை செய்ய தூண்டியுள்ளார் .

தினம் தினம் காதலுக்கு எதிரான சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தேறுகிற நிலை உருவாகி இருக்கிறது. காதல் திருமணங்கள் நடைபெறுகிற போது அதை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் காவல்துறை அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் தொடர்ந்து தவறி வருகிறது.

இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வண்மையாக கண்டிக்கிறோம். இந்த சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து நாளை 17/09/2025 ‌தமிழ்நாடு முழுவதும்  கண்டன போராட்டங்கள் நடத்த அறைகூவல் விடுக்கிறோம்.

சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்வதோடு பாதிக்கப்பட்ட தனது ஒரே மகனான வைரமுத்துவை இழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.