கோவி.பால.முருகு
விமானத்தில் பறந்து செல்ல ஆசை-அது
விரையும் போது கீழே பார்க்க ஆசை!
கப்பலிலே நீந்திச் செல்ல ஆசை-அங்கே
கடலின் அழகைக் கண்டு களிக்க ஆசை!
இரயில் வண்டிப் பயணத்தில் ஆசை -அது
எழுப்பும் ஓசை காதில் கேட்க ஆசை!
பேருந்தில் பயணம் செய்ய ஆசை-அது
பின்னே தள்ளும் ஊர்கள் பார்க்க ஆசை!
மகிழுந்தில் பயணம் செய்ய ஆசை-உள்ளே
மகிழ்ச்சி யான பாடல் கேட்க ஆசை!
மாட்டு வண்டிப் பயணத்தில் ஆசை-அதில்
மாட்டின் மணியின் ஓசை கேட்க ஆசை!
யானை மீது அமர்ந்திடவே ஆசை-அங்கே
யானை அசைவின் நடையில் மகிழ ஆசை!
குதிரை மீது சவாரிசெய்ய ஆசை-அது
குதித்து ஓடும் அழகில்
திளைக்க சுவைக்க ஆசை!
ஒட்டகத்தில் பயணம் செய்ய ஆசை-அதை
ஒட்டி உறவாட வேண்டு மென்ற ஆசை!
பயணம் செய்யப் பலவழிகள் உண்டு-அந்த
பயணம் கொடுக்கும் இன்பம் மிகவும் நன்று!