tamilnadu

img

அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்  மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்
 மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

திருவண்ணாமலை, செப். 17- திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்ட காலத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் தூய்மை பணி செய்து வருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு எந்தவிதமான சட்ட உரிமைகளையும் மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஒப்பந்தப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதில்லை.  தொழிலாளர்களுக்கு உடைமாற்ற அறை வசதி இல்லை. வீட்டிலிருந்தே பணி சீருடையில் வர வேண்டும். வேலையை மேற்பார்வையிடும், வேலை வாங்கும் நிர்வாகத்தின் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, மரியாதை குறைவாக நடத்துவது போன்ற செயல்கள் தொடர்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கண்ணியமான, மரியாதையான பணி சூழல், கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 13 வருடங்களாக பணி செய்து வரும் தூய்மை பணியாளரில் நிரந்தரப் பணியாளராக யாரும் இல்லை. எனவே, பணி மூப்புப்படி நிரந்தரப்படுத்த வேண்டும், அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூ.752 ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் துணி மாற்ற, உணவு உண்ண அறை ஒதுக்க வேண்டும், வேலை அடையாள அட்டை, காப்பீடு வழங்க வேண்டும், தொழிலாளர்களின் உணவு உத்தரவாதத்திற்கு கேண்டீன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கையுறை இல்லாமல் வேலை செய்ய அனுமதிப்பதை தடை செய்து, தேவையான எண்ணிக்கையில் கையுறைகள், கிருமிநாசினி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு நிர்வாகிகள் கே. நாகராஜ், இரா.பாரி, எம். வீரபத்திரன், கமலக்கண்ணன் ஆகியோர் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.