ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அளித்த விவகாரம் தொடர்பாக விமர்சித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசு முற்றிலும் சமரசம் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என அமெரிக்கா முடிவு செய்கிறது. இது, அடிப்படையாகவே ஒரு கேள்வியை எழுப்புகிறது. இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?
இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா மூழ்கடித்தது கவலை அளிக்கிறது. இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்த ஒரு பன்னாட்டு கப்பலை மூழ்கடிக்கப்பட்டதற்கு இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்றக்கூடாது.
இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையில் ஒன்றிய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்துகொண்டுள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம், இறையாண்மை, நாட்டு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
