ஆசிய வளர்ச்சி வங்கி கடன் திட்டத்தை திரும்பபெறவேண்டும் சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு கோரிக்கை
புதுச்சேரி, ஆக.18- ஆசிய வளர்ச்சி வங்கி கடன் திட்டத்தால் விவசாயிகள், மீனவர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன், துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் பல்வேறு உள்கட்ட மைப்பு திட்டங்களுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ. 4750 கோடி மென் கடன் பெறவிருப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளி யாகியுள்ளது. இந்தத் திட்டங்களில் உள்ள சில குறைபாடுகள் மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீர்ப்பாசனத் திட்டத்தில் குளறுபடி செயற்கை குழாய்கள் தேவையா? சத்தனூர் அணையிலிருந்து பாகூர் மற்றும் கிருபாம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் நிரப்ப, பெண்ணையார் ஆற்றின் அடியில் அல்லது அதன் ஓரமாக 140 கி.மீ. நீளமுள்ள குழாய் அமைக்கும் திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த ஏரிகளுக்கும் மற்ற பாசன ஏரிகளுக்கும் நீர் வழங்க பங்காரு வாய்க்கால் என்ற கால்வாய் ஏற்கெனவே உள்ளது. பல ஆண்டுகளாகப் பொதுப்பணித் துறையால் கைவிடப்பட்ட இந்த வாய்க்கால், தற்போது ஆக்கிர மிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வாய்க்காலைச் சீரமைப்பதற்குப் பதிலாக, புதிய குழாய் அமைப்புகளை ஏற்படுத்துவது, இந்த ஏரிகளைச் சார்ந்துள்ள சிறு விவசாயிகளின் (ஆயக்கட்டுதாரர்கள்) வழக்கமான நீர்ப்பாசன உரிமைகளைப் பறிக்கும் செயலாக மாறும். எனவே, இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அதன் நம்பகத்தன்மை, சமூக-சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் பங்களிப்புடன் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பா? தற்போதுள்ள கடற்கரை நடை பாதை முத்தியால்பேட்டையிலிருந்து சுண்ணாம்பாறு வரை நீட்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள நடைபாதை காரணமாக வம்பாகீரப்பாளையம் கிராமத்தில் பல விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. மேலும், குருசுக்குப்பம், வைத்திக் குப்பம் மற்றும் சோலை நகர் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் படகுகளை நிறுத்துவதற்கும், வலைகளைப் பழுது பார்ப்பதற்கும் இடமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடைபாதையை மேலும் நீட்டிப்பது, இந்த நிலையை மேலும் மோசமாக்கி, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில் சுற்றுலாவின் எதிர்மறை தாக்கங்களை அதி கரிக்கும். எனவே, இந்தத் திட்டத்தை மீண்டும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட கிராம மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று வலி யுறுத்துகிறோம். இயற்கை வளங்களைப் பாது காப்பது அவசியம். புதுச்சேரி குறைந்த அளவிலான இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம். அரசின் தவறாகத் திட்டங்களாலும், பொறுப்பற்ற கொள்கைகளாலும் இந்த வளங்கள் கடுமையான அச்சுறுத்தலில் உள்ளன. நிலத்தடிநீரைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை விட்டு விட்டு, கிராமப்புற நீர் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் பிரெஞ்சு மேம்பாட்டு வங்கியிடமிருந்து நிதி பெற்று, நகர்ப்புறத்தில் 24 மணி நேர குடிநீர் வழங்க ஆழ்துளைக் கிணறு கள் அமைக்க முயற்சிப்பது. கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட்ட ஏரிகளின் கரைகளில், சமீபத்தில் உழந்தை ஏரியில் சட்ட விரோதமாக முதல்வர். என். ரங்கசாமி 75வது பிறந்தநாள் நினைவுத்தூண் கட்டப்பட்டது. இத்தகைய பொறுப்பற்ற நட வடிக்கைகள் புதுச்சேரியின் இயற்கை வளங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. முறையான மற்றும் பங்கேற்புத் திட்டமிடல் மூலம் இந்த வளங்களைப் பாது காப்பது மிகவும் அவசரமானது மற்றும் அவசியமானது. இது விவசாயிகளின் மற்றும் மீனவர்க ளின் வாழ்வாதாரங்களின் நிலைத் தன்மையை உறுதி செய்யும்.எனவே, புதுச்சேரியின் நலன்களுக்கும், மக்களின் நலன்களுக்கும் பாதகமான இத்தகைய திட்டங்களில் தாங்கள் தலையிட்டு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம். அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிலத்தடி நீர் பாதுகாப்புக்கான நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.