ரேஷன் கடை ஊழியர்கள் புகார்களின்றி பணியாற்ற வேண்டும் பயிற்சி வகுப்பில் டிஆர்ஓ அறிவுரை
வேலூர், ஆக.30- வேலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை சேல்ஸ்மேன்கள், கட்டுநர்கள் பணியின்போது எவ்வித புகாருக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும் என்று டிஆர்ஓ மாலதி பேசினார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றுவதற்கு புதிதாக 76 விற்பனையாளர்கள், 26 கட்டுநர்கள் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக டிஆர்ஓ மாலதி கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த பயிற்சி வகுப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி கையேட்டை படித்து அதன் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழியர்கள் அனைவரும் கடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திறக்க வேண்டும். சிலர் பகுதிநேர கடைக்கு செல்லும் போது எப்போது செல்கிறீர்கள் என்ற விவரத்தை கடையில் எழுதி வைக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து புகார்கள் ஏதும் வராமல் பணியாற்ற வேண்டும். கடையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பொதுமக்களுக்கு சரியாக விநியோகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணை வேலூர் ஆட்சியர் வழங்கினார்
குடியாத்தம், ஆக.30- குடியாத்தம் அருகே நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான உடனடி ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அம்மனங்குப்பம் கிராமத்தில் உள்ள கேஎம்ஜி கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாவட்டஆட்சியர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 27 பள்ளிகளை சார்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த 154 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 94 மாணவர்கள் கல்லூரிகளில் இணைய ஆர்வம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினர். அதில் 51 பேருக்கு உடனடியாக கல்லூரி சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆட்டோ டெஸ்க் இமேஜின் விருது
சென்னை, ஆக. 30- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்கட்டமைப்பில் புதுமையான வடிவமைப்பு என்ற பிரிவின் கீழ், கட்டுமானத் தகவல் மாதிரியை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக ஆட்டோடெஸ்க் இமேஜின் விருது 2025-ஐ வென்றது. பிஐஎம் ஒரு கட்டிடத்தின் முப்பரிமாண (3டி) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. கட்டிடம் முழுவதும் உள்ள அனைத்து தரவுகளையும் உருவாக்குதல் மற்றும் நிர்வகிக்கும் ஒரு வழிமுறையாகும். இந்த விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. ஆட்டோடெஸ்க் இமேஜின் விருதுகள், ஆக்கப்பூர்வமான சிந்தனை, கூட்டுப்பணி, மற்றும் சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் திட்டங்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன. கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் கட்டுமானம், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கல்வி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடரும் விபத்துகள்! மாமல்லபுரம், ஆக.30 - மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையின் நடுவே மாமல்லபுரம் கோவளம் சாலை, தென்மாட வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, பூஞ்சேரி கூட்ரோடு, ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மாடுகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றன. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ‘மாமல்லபுரம் இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, கோவளம் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் சாலைகள், பூஞ்சேரி கூட்ரோடு முழுவதும் மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை கயிற்றால் கட்டி பராமரிப்பது இல்லை. எனவே, மாட்டினை சாலையில் மேயவிட்டுள்ள உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும்’ என்றனர்.