துணை மேயருக்கு ஆதிதிராவிடர் பேரவை கண்டனம்!
சென்னை, ஆக. 27- சென்னை மாநகராட்சி தூய்மை தொழிலாளர்களை முரட்டுத்தனமாக கைது செய்ததை கண்டித்து சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறியபோது அநாகரிகமாக பேசிய துணைமேயரை தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை வன்மையாக கண்டித்துள்ளது. பணிநிரந்தரம் கோரி ஆக. 1 முதல் 13 வரை சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை காவல்துறை நள்ளிரவில் கைது செய்து அப்புறப்படுத்தியதைக் கண்டித்து செவ்வாயன்று (ஆக.26) நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ உறுப்பினர்களிடம் “உங்கள் கருத்தை சொல்லிவிட்டு நீங்கள் புறப்படலாம். அரசியலுக்காக பேச வேண்டாம் “ இருக்கையில் அமருங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திய சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ்குமாரை வன்மையாகக் கண்டிக்கிறோம். களத்தில் நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக மாநகராட்சி மன்றத்தில் குரல் எழுப்பி, வெளிநடப்பு செய்த சிபிஎம், சிபிஐ கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை (சென்னை) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரி வித்துள்ளது.
இன்று 10 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சென்னை, ஆக.27- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வியாழக்கிழமை (ஆக.28) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மணலி (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை. ராயபுரம் (மண்டலம்-5), வார்டு-59ல், பார்க் டவுன், ஏகாம்பரேஸ்வர அக்ரஹாரம் தெருவில் உள்ள ஶ்ரீமகேஸ்வரி சபா, திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-75ல், தலைமைச் செயலக காலனி 3வது தெருவில் உள்ள தலைமைச் செயலக மெட்ரிக் பள்ளி. அண்ணாநகர் (மண்டலம்-8), வார்டு-103ல் அண்ணாநகர் 7வது பிரதான சாலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடம், தேனாம்பேட்டை (மண்டலம்-9), வார்டு-121ல் மயிலாப்பூர், ராயப்பேட்டை பிரதான சாலை, ரங்கையா கார்டனில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. இளம் ஆண்கள் இந்திய சங்கம். கோடம்பாக்கம் (மண்டலம்-10), வார்டு-134ல் அசோக் நகர், பக்தவச்சலம் தெருவில் உள்ள விளையாட்டுத் திடல், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம். ஆலந்தூர் (மண்டலம்-12), வார்டு-161ல் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். நிதி திருமண மண்டபம், அடையாறு (மண்டலம்-13), வார்டு-178ல், தரமணி, சி.எஸ்.ஐ.ஆர். சாலையில் உள்ள 5சி பேருந்து நிலையம் ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு
சென்னை, ஆக.27- ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 390-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்
சென்னை, ஆக.27- ரூ.10.54 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் ஜி.வி. பிலிம்ஸ் நிர்வாகி அப்துல் ஹமீதுக்கு ஓராண்டு சிறை விதிக்கபப்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.10.54 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி புகாரில் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. 1996ல் வழக்கு பதிவான நிலையில் 2023ல் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் 3 பேர் மரணமடைந்த நிலை யில் வழக்கில் இருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். மற்ற வர்கள் மீதான வழக்கை சென்னை சிபிஐ நீதிமன்றம் விசா ரித்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன் சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம், ஆக.27- தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலி யாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங் கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சீபுரம் என்ற முகவரியில் இந்த செப்.4-ந் தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.