tamilnadu

img

காலை உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு

காலை உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு

சிதம்பரம், செப்.25– கடலுார் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 108 மாணவர்கள் ஒன்று முதல் 8 வகுப்பு வரை படிக்கின்றனர். மாணவர்களுக்கு வழக்கம் போல் வியாழனன்று காலை உணவாக சேமியா கிச்சடி மற்றும் சாம்பார் வழங்கினர். 16 மாணவர்கள் உணவு வாங்கி சென்றனர். அப்பொழுது ஒரு மாணவர் தட்டில் ஊற்றிய சாம்பாரிலிருந்து பல்லி கிடந்தது தெரிய வந்தது. இதனை பார்த்தவுடன் மாணவர்கள் வாந்தி, மயக்கம் வருவதாக கூறியதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து மருத்துவர் கனிமொழி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாணவர்களை பரிசோதித்தனர். எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து  ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் பிள்ளைகளைசிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உரியசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் குரல் எழுப்பினர். இதனால் அங்கு  பரபரப்பு காணப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் செல்வம் நேரில் விசாரித்து 108 ஆம்புலன்ஸ் மூலம்  17 மாணவர்களை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்குப் பின் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.