விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
கடலூர், ஆக. 20 - கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரி ழந்தனர். எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ஐயப்பன், ஆதினேஷ், வேலு, கௌதம், நடராஜ் ஆகிய ஆறு பேரும் காரில் விருத்தாச்சலத்தில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சேலம் புறவழிச்சாலை வழியாக சென்றனர். மணவாளர் நல்லூர் அருகே காரில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதி வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கிக்கொண்ட வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன், ஆதினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக இரண்டு பேர் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
