tamilnadu

தனியார் ஆலை பாய்லர் வெடித்து 3 பேர் பலி

உத்திரமேரூர், ஏப்.5-

உத்திரமேரூர் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநிலதொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் நோபல்டெக் என்ற இரும்பு உருக்கு தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இத்தொழிற்சாலையில் தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம், ஒரிசா, பீகார்உள்ளிட்ட மாநிலங்களைச் சார்ந்தஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில், இரும்புகளை உருக்கி பெரிய அளவிலான இரும்பு தண்டவாளங்கள், கட்டுமான பொருட்களுக்கு தேவையானஇரும்புகள் தயாரிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் வியாழனன்று (ஏப்.4) இரவு தொழிலாளர்கள் இரவுப்பணியின் போது, இரும்பை உருக்கும் பாய்லர் திடிரென்று வெடித்துள்ளது. அதில் கொதித்துக்கொண்டிருந்த இரும்பு குழம்பானது அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த அகிலேஷ் (34), பீகாரைச் சேர்ந்த சிறீகாந்த் (30),கிஷாநத் (40), ரஞ்சித் (27), ஜித்தானந்தன் (30), சுரேந்தர் (34),தினேஷ் (25), ஜச்சா (30), மீது சிதறிவிழுந்தது. இதில் பலத்த தீக்காயம் ஏற்பட்ட அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினேஷ், சுரேந்தர், அகிலேஷ், ஜச்சாஆகியோரும், சிறீகாந்த், கிஷாநத், ரஞ்சித், ஜித்தநாத் ஆகியோர் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்மருத்துவமனையிலும் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப்பட்டனர். இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த தினேஷ், சுரேந்தர், உத்திரபிரதேசத்தை சேர்ந்த அகிலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஜச்சா என்பவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற நான்குபேருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதனைத் தொடர்ந்து தொழிற் சாலையில் பணியாற்றும், தொழிலாளர்கள் சிஐடியு சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்ட்தில் ஈடுபட்டனர். சிஐடியுமாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், பெருநகர் காவல்நிலையத்திலும், தொழிலக பாதுகாப்பு அலுவலர்களிடத்திலும் புகார்மனு அளித்துள்ளார்.இதுகுறித்து முத்துக்குமார் கூறியதாவது:-பயிற்சியற்ற தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தியதால் பாய்லர் வெடித்து, 9 வட மாநிலத்தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பயன்பாடற்ற இரும்பு பொருட்கள் கேஸ்சிலிண்டர் போன்றவற்றை இங்கு உருக்கி, இரும்பு ராடுகளை தயாரித்துவருகின்றனர். வீட்டுஉபோயக காஸ் சிலிண்டர்களை உருக்கும் போது அவற்றை இரண்டாக உடைத்து உள்ளிருக்கும் கேஸை வெளியேற்றிவிட்டு பின்னர் உருக்க வேண்டும் ஆனால் நிர்வாகத்தின் சார்பில் சிலிண்டர்களை உடைக்காமல் முழுமையாக போட்டுஉருக்க நிர்பந்தித்துள்ளனர். இதில் சிலிண்டரில் இருந்த காஸ் வெளிப்பட்டதில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்பாடே இந்த விபத்திற்கு காரணம். இந்த தொழிற்சாலையில் விதிகளுக்கு எதிராக உற்பத்தி முறையும், பயிற்சியற்ற தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் என தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நடந்துள்ள உயிரிழப்பு மற்றும் தீக்காயங்களும் முழுக்க தொழிற்சாலை சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையால் ஏற்பட்டதாகும். சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபட்ட நிர்வாகத்தின் மீதும், உயிரிழப்புக்கு காரணமான நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரையிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;