tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

திட்டக்குடியில் 20 சவரன்  நகை கொள்ளை

கடலூர், செப். 22 - திட்டக்குடி அடுத்த வெங்கானூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெக நாதன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரு கிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (32) வெங்கனூர் மேற்கு தெரு வில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை (செப்.21) அங்கேயே தங்கி விட்டார். மறுநாள் திங்கள்கிழமை(செப்.22) வீட்டிற்கு வந்த போது  கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார். பெட்டியில் இருந்து 20 சவரன் நகையை வீட்டின் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் செப். 26 விவசாய குறைதீர் கூட்டம்

விழுப்புரம், செப். 22 - விழுப்புரத்தில் வருகிற 26 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாதம் தோறும் விவசாயிகள் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவ சாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

அனைத்துத்துறை ஓய்வூதியர்கள்  சங்கத்தின்  மாநாடு

 கள்ளக்குறிச்சி, செப். 22- கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5 ஆவது வட்ட மாநாடு தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ராஜேந்திரன் வரவேற்றார். கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.கிராம வருவாய் நிர்வாக ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் இராசு உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். சங்க செயலாளர் சடகோபன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் கோவிந்தராஜன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும், மாநில அரசு விரைவில் ஊதிய குழு அமைக்க வேண்டும் போன்ற 15 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கடலூர், செப். 22 -  வடலூர் ரயில்வே கேட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்த நான்கு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.  அதில் இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். வடலூர் குணாளன் (24), பண்ருட்டி சீனிவாசன் (21) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்தனர்.

நவோதயா பள்ளிக்கு இணையான  உண்டு, உறங்கும் பள்ளி துவங்க கோரிக்கை

புதுச்சேரி, செப். 22 -  நவோதயா பள்ளிக்கு இணையான உண்டு உறங்கும் பள்ளியை ஏம்பலம் பகுதியில் கட்டி தர வேண்டும் என்று புதுச்சேரி அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் குழு பேரவை கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது. சுரேந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில நிர்வாகிகள் இறையன்பு, குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வு தலைவராக நடராஜன், செயலாளராக செங்குலதான், பொருளாளராக மகாலட்சுமி உட்பட 10 பேர்கள் கொண்ட கொம்யூன் குழு தேர்வு செய்யப்பட்டது.  புதுச்சேரி அரசு கடந்த பட்ஜெட் கூட்டதொடரில் அறிவித்த ஆதிதிராவிட நலத்துறை கிளை அலுவலகம் வில்லிய னூரில் அமைக்க வேண்டும், நவோதயா பள்ளிக்கு இணையான உண்டு உறங்கும் பள்ளியை ஏம்பலம் பகுதியில் கட்டி தர வேண்டும், துணை நிதியை முழுமையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் திட்டங்களுக்கு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுய உதவிக் குழுக்களின் சேமிப்பு பணம் ரூ. 35 லட்சத்தை கொள்ளையடிக்கும் முயற்சியை தடுக்க கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் மாயம்

கடலூர், செப். 22 -  கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அதேபோல் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றார். வீட்டிலிருந்த மாணவனை காணவில்லை என்று பெற்றோரின் புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடலூர் பகுதியில் 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையிடம் சண்டை போட்டநிலையில், சிறுவன் காணவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 24 வயது பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது. இந்த பெண்,தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர். தாய் வீட்டிற்கு செல்லவில்லை. இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திட்டக்குடியில் 18 வயது பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். பிறகு, வீட்டிற்கு வந்தபோது மகளை காணவில்லை. இது குறித்து  ஆவினங்குடி காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர். சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது மாணவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வெளியூரில் தங்கி படித்து வரும் அவர் கடந்த 12ஆம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், கல்லூரிக்கு செல்வதாக பேருந்தில் சென்றவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.