tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

அரும்பாக்கத்தில் கஞ்சா விற்ற  2 பேர் கைது

சென்னை, அக்.16- அரும்பாக்கம் பகுதியில் உயர்ரக கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் அரும்பாக்கம், அசோகா நகர், 100 அடி சாலை சந்திப்பு அருகே கண்காணித்து, பிரின்ஸ் (38), சமீர் (43) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,066 கிராம் Hash Oil, 180 கிராம் ஓஜி கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் அம்பத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து, ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்ததும், இவர்கள் மீது ஏற்கெனவே பல மாநிலங்களில் போதைப்பொருள் வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாநில குத்துச்சண்டை  வீரர்கள் போட்டித் தேர்வு

சென்னை, அக்.16- தமிழக மாநில குத்துச்சண்டை சங்கமும், சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கமும் இணைந்து மாநில அளவிலான குத்துச்சண்டை வீரர்கள் தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 3 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுகள் மூலம் தேசிய சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்புக்கான மாநில அணியையும், சப்-ஜூனியர், ஜூனியர், இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கப் பிரிவு (2025-26) தேசியப் போட்டிகளுக்கான வீரர்களையும் தேர்வு செய்ய உள்ளனர். வீரர்களின் பதிவு, மருத்துவப் பரிசோதனை மற்றும் எடைக்கட்டுதல் பணிகள் நவம்பர் 3ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். இத்தேர்வுகளை தமிழக மாநில குத்துச்சண்டை சங்கத் தலைவர் கே. ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் ஜி. ப்ரித்விராஜ் ஆகியோர் நடத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஜி.பி. ரதன் (செயலாளர், சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம்) ஆவார். மேலும் தகவல்களுக்கு 98843 79908 என்ற எண்ணில் அல்லது caba@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

கோடக்கின் புதிய ஃபண்ட் திட்டம்

சென்னை, அக்.16- கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் கோடக் தங்கம் வெள்ளி பாசிவ் எப்ஒஎப்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், கோடக் கோல்ட் ஈ.டி.எஃப். மற்றும் கோடக் சில்வர் ஈ.டி.எஃப்அலகு களில் முதலீடு செய்கிறது.  இதன் மூலம் நீண்டகால மூலதனப் பெருக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் பொது மக்களுக்கு அக்.6, அன்று தொடங்கி அக்.20 அன்று முடிவடை கிறது.  தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் வரலாற்று ரீதியாக மதிப்பு மிக்க சேமிப்புச் சாதனங்களாகச் செயல்பட்டுள்ளன.  உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புகளை அதிகரித்து வரும் நிலையில், தொழிற்துறை மற்றும் முத லீட்டுப் பிரிவுகளில் வெள்ளியின் தேவை அதிகரித்து வரு வதால் இந்த புதிய திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் நிமேஷ் ஷா கூறியுள்ளார்.

அடையாறு ஆற்றின் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என புகார்

சென்னை, அக்.16- பருவமழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள முடிச்சூர், பிடிசி குடியிருப்பு, ராயப்பா நகர், வரதராஜபுரம், அஞ்சுக நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்குவது வழக்கம். பெருங்களத்தூர் குடியிருப்பு நலச்சங்கத் தலைவர் மகேந்திர பூபதி, மழைக்காலத்திற்குள் நூறு சதவீத பணிகளும் முடிக்கப்படும் எனக் கூறிய அதிகாரிகள் இன்னும் பள்ளங்கள் தோண்டப்பட்டு கால்வாய் பணிகளை முடிக்காமல் உள்ளனர் என குற்றம் சாட்டினார். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 24 கி.மீ தூரத்திற்கு வெறும் ரூ.1.50 கோடி  மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது, இது ஆகாயத்தாமரை அகற்று வதற்கு மட்டுமே போதுமானது என்றார். ஒரத்தூர் இணைப்பு கால்வாய் 35 கோடி ரூபாயிலும், சோமங்கலம் இணைப்பு கால்வாய் 20 கோடி ரூபாயிலும் நடை பெற்று வருகிறது. இந்த இரண்டு பணி களும் 40% முடிந்துள்ளதாகவும், அடுத்தாண்டு பருவமழைக்குள் முழுவதும் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.