tamilnadu

img

நம் தொழில் வளர்ச்சியின்  மந்திரச்சாவி எங்கே இருக்கிறது?

நம் தொழில் வளர்ச்சியின்  மந்திரச்சாவி எங்கே இருக்கிறது?

இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்த அறிவிப்பு நடப்பு நிதியாண்டின் (2025 ஏப்ரல் - செப்டம்பர்) முதல் அரையாண்டில் ரூ. 9  லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு குறித்த அறிவிப்பு ரூ.60 ஆயிரம் கோடியாக குறைந்து இருக்கிறது. கடந்த கொரோனா பெருந் தொற்று காலத்திற்குப் பிறகு ஐந்தாண்டு காலத்தில் இது  மிகவும் குறைவு என்று முதலீடு குறித்த சமீபத்திய புள்ளி விவரம் (இந்து ஆங்கில நாளேடு) தெரிவிக்கிறது. உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களில் முதலீடுகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, அரசின் முதலீடு குறித்த அறிவிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக சரிந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 71%  வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்களின் மூலம், வெளிநாட்டு நிறு வனங்கள் இந்தியாவை  முதலீட்டிற்கு உரிய நம்பகமான  இடமாக பார்க்கவில்லை என்பதும், அதேசமயம் இந்தியா வின் பெரு நிறுவனங்கள் உள்நாட்டு சந்தை வாய்ப்பை  ஏகபோகமாக கைப்பற்ற தயாராகி வருகிறார்கள் என் பதும் வெளிப்படுகிறது.  இதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதில் இருந்து மீள்வதற்காக என்று, அதிபர் ட்ரம்ப் அறிவிக்கும் தான்தோன்றித்தனமான அறிவிப்புகள் இடி யாப்பச் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. எனவே பன் னாட்டு பெரு முதலீட்டு நிறுவனங்கள் வேறு வழியை  தேடுகின்றனர். அதேசமயம் இந்தியாவில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா அரசு பெரு நிறுவனங்களுக்கு சாதக மான கொள்கை முடிவுகளை மட்டுமே தொடர்ந்து எடுத்து வருகிறது. இதனால் அபரிமிதமாக லாபம் ஈட்டி இருக்கக் கூடிய பெரு நிறுவனங்கள், உள்நாட்டு சந்தையில் தங் களுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தி இருக்கின்றனர். இதை வேறு வார்த்தையில் சொல்வதென்றால், பெரு நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் லாபம் சுருங்கி, முதலீடு வாய்ப்பும் சுருங்கி, நெருக்கடியில் தள்ளப்படுகின்றன. இத னால் இதுவரை அவர்கள் இயங்கி வந்த சந்தையை, பெரு நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. இது தற் செயலாக நடக்கக்கூடிய விஷயம் இல்லை.  நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நடுத்தர, சிறு, குறு  நிறுவனங்களுக்கான (2024 - 25) அறிக்கையில் 20% சிறு,  குறு நிறுவனங்கள் மட்டுமே வங்கிக் கடன் வசதியை பெறுகின்றன. 80% நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற  முடியாத நிலையில் உள்ளன. சிறு, குறு நிறுவனங் களுக்கு கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.80 லட்சம்  கோடி  வங்கி கடன் கொடுக்கப்படாமல் இடைவெளி உள் ளது. அரசு மானியம், நிதி உதவி, உள்கட்டமைப்பு வசதி,  சந்தை வாய்ப்பு உதவி என சிறு, குறு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் போதிய ஒத்துழைப்பு இல்லை என்பதை நிதி ஆயோக் ஒப்புக் கொண்டுள்ளது.  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30% பங்களிப்பு செலுத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில்  துறையில், 12 கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுகின்ற னர். இந்தியாவில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிறு,  குறு, நடுத்தர தொழில் துறைக்கு கிட்டத்தட்ட எந்த ஆதர வும், ஒத்துழைப்பும் இல்லை என்பதைத் தான் நிதி ஆயோக் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.  மாறாக சின்ன மீன்களை திமிங்கிலங்கள் விழுங்கி ஏப்பம் விடும் காட்சியைத் தான் மேலே சொன்ன புள்ளி  விவரங்கள் காட்டுகின்றன.  தொழில் உற்பத்தி துறையின் சித்திரம் மேலே சொன் னபடி இருக்க, இந்தியாவின் முதுகெலும்பாக இருக் கக்கூடிய விவசாயத்துறை தவறான முறையில் கையாளப் படுகிறது. நோய் நாடி சிகிச்சை அளிப்பதற்கு மாறாக, நோயாளியை கொல்லும் வழிமுறையை ஒன்றிய அரசு பின் பற்றுகிறது.  அதாவது உள்நாட்டு தேவைக்கு ஏற்ற முறையில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்கு ஏற்ப விவ சாயத்திற்கு தேவையான உதவிகளை செய்யவும், பொது முதலீடுகளை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு தீவிர மான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் விவ சாய விளைபொருட்கள் ஏற்றுமதி, உணவுப் பயிர்க ளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, வணிக  பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற நிலை பாட்டை அரசு திணிக்கிறது. தொழில்துறையில் ஒன்றிய அரசு அணுகுமுறை எப்படி உள்ளதோ, அதே தன்மையில் தான் விவசாயத் துறையிலும் செயல்படுகிறது. தொழில்துறையில் சிறு,  குறு, நடுத்தர தொழில் துறையினரை கைவிட்டு, மிகப் பெரும் நிறுவனங்களுக்கு மட்டும் கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பது என்று செயல்படுகின்றனர். அதே  போல் பெரும் நில உடமையாளர்கள், கார்ப்பரேட் முறை யில் செயல்படும் பெரும் பணக்கார விவசாயிகள் ஆகியோ ருக்கு மட்டுமே ஆதரவாக, தாராளமய, ஏற்றுமதி வர்த் தக கொள்கையை ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது.  சிறு, குறு தொழில் துறையினரை கண்டு கொள்ளா ததை போல, சிறு, நடுத்தர, ஏழை விவசாயிகளையும் கைவிட்டு விட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டில் நம் இந்திய விவசாயி கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரி வித்துள்ளது.  விவசாயத்தில் ஈடுபடுவோரில் 2022 ஆம் ஆண்டில்  11,290 பேர் (இதில் 6083 விவசாயத் தொழிலாளர்கள்) தற்கொலை செய்து கொண்டனர். 2023 ஆம் ஆண்டில் 10,786 பேர் (6096 விவசாய தொழிலாளர்கள்) தற்கொலை செய்து கொண்டனர். இந்தத் தற்கொலைகளுக்கு முதன் மையான காரணம் கந்துவட்டி கொடுமை, விவசாய விளைப் பொருட்களுக்கு விலை கிடைக்காதது, விவசாயம் பொய்த்து போவது ஆகியவைதான். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விவ சாயிகள் உயிரைப் பாதுகாத்து, விவசாயத்தை மீட்சி பெறச் செய்வதற்கு மாறாக, எதிர் திசையில் ஒன்றிய அரசு  செயல்படுகிறது. நம் நாடு விடுதலை பெற்ற சமயம் 1951 ஆம் ஆண்டு  நம் மக்கள் தொகையில் 70% பேர் நேரடியாகவும், மறை முகமாகவும் விவசாயத்தை சார்ந்து இருந்தனர். அப் பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவ சாயத்தின் பங்களிப்பு 55% ஆக இருந்தது. ஆனால் அதில்  மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 17% ஆக 2023  ஆம் ஆண்டில் விவசாய பங்களிப்பு சரிந்து விட்டது.  அதேசமயம் விவசாயத்தை நேரடியாகவும், மறைமுக மாகவும் சார்ந்து வாழக்கூடிய மக்கள் 65 கோடி பேர் உள்ளனர். விவசாயிகளையும், விவசாயத்தையும் திட்டமிட்டு புறக்கணிப்பதன் மூலம், வேலை கிடைக்காமல், வரு மானத்திற்கு வழியின்றி பட்டினியில் தள்ளுகிறது ஒன்றிய  அரசு. அதன் தொடர்ச்சியாக, கிராமப்புற உழைப் பாளி மக்களை அவர்களது பாசத்திற்குரிய குடும்பத் தினரை, சொந்த, பந்தங்களை விட்டு விட்டு, சொந்த  கிராமங்களை விட்டு விட்டு, அருகிலுள்ள நகரங்களுக் கும், அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், தொலைதூர மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்லும்படி விரட்டுகிறது. அவர்கள் தான் உடல் உழைப்பை நம்பி இருக்கும் அத்து கூலிகளாக, புலம்பெயர் தொழிலாளர்களாக, ஒப் பீட்டு அளவில் வளர்ந்த மாநிலங்களில், அண்டிப் பிழைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல் படுத்தப்பட்ட 1991 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் எண் ணிக்கை 23 கோடியே 10 லட்சம் பேர். இது 2011 ஆம்  ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 45 கோடியை 50 லட்சம் பேராக அதிகரித்திருக்கிறது! அதற்குப் பிறகு  அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் படாத நிலையில், அதற்குப் பிந்தைய 15 ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பற்றிய துல்லியமான விபரம் தெரிய வில்லை. உத்தேச மதிப்பீட்டின்படி கணக்கிட்டாலும் 55  கோடி பேருக்கு குறைவில்லாமல் வரும். குறைந்தபட்சம் மூன்றில் ஒரு இந்தியர் தங்கள் தொப்புள் கொடி உறவு களை விட்டு விலகி, எங்கோ புலம்பெயர்ந்து உழைத் துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிலைமை. கொரோனாவிற்கு பிந்தைய 2021 ஆம் ஆண்டில் மட்டும் 37,751 தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள் என்ற விபரம் அவர்களது துயர நிலையை வெளிப்படுத்தும். சுருக்கமாக சொல்வதென்றால், விவசாயத்தையும், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையையும் ஆட்சியா ளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்டதால், உண்மை யான இந்தியா நிர்க்கதியாய் நிற்கிறது. மறுபுறம் “வளர்ச்சி” என்று ஆட்சியாளர்கள் அலங்கா ரமாக உச்சரிக்கும் கொள்கையை அமல்படுத்துவதால், நகர்புறங்களைச் சார்ந்திருக்க கூடிய நடுத்தர வர்க்கத் தினர் தோராயமாக 40 கோடி பேர் இருக்கின்றனர். இதி லும் கீழ் மட்டத்தில் இருக்கக்கூடியவர்களின் வருமா னம் கடந்த சில வருடங்களாக வீழ்ச்சி அடைந்து வருவ தால், நடுத்தர வர்க்கம் என்ற அந்தஸ்து நிலையில் இருந்து  கணிசமானவர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து தேக்க நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகள் பின்பற்றக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள் ஒரு முட்டுச் சந்தில் போய் நிற்கின்றன. வேலையின்மையும், விலைவாசி உயர் வும், அந்த நாடுகளின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியில் இருந்து மீள வும், தற்காத்துக் கொள்ளவும் தான் டிரம்ப் போன்ற  வலதுசாரிகள் சர்வதேச சட்டங்களையும், ஒப்புக் கொள்ளப்பட்ட பொது ஒழுங்கையும் கைவிட்டு தான் தோன்றித்தனமான அறிவிப்புகளை, கொள்கைகளை உத்தரவிட்டு கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான், கட்டுரையின் ஆரம்பத் தில் குறிப்பிட்டு இருப்பது போல இந்திய அரசு முத லீடு 71% சரிந்து இருக்கிறது. இந்தியாவின் தொழில் துறையை உண்மையாக வளர்ப்பதற்கான மந்திரச் சாவி கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் கையில் இல்லை. மாறாக, விவசாயத்துறையில் சந்தை நோக்கம், ஏற்று மதி வர்த்தகம் என்ற கண்ணோட்டத்தை கைவிட்டு, இந்தத் துறையில் மிகப் பெரும்பான்மையாக இருக் கக்கூடிய சிறு, குறு, ஏழை விவசாயிகள் மீள்வதற்கான அரசின் ஒத்துழைப்பு தேவை. நிலச் சீர்திருத்தம், நீர்ப் பாசனத்திற்கான விவசாய பொது முதலீடு அதிகரிப்பு, வேளாண் அறிஞர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரை களை அமலாக்குவது ஆகியவற்றின் மூலம் இந்திய  விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும். இந்தியா வின் முதுகெலும்பு வலிமையாக இருந்தால் தான் கம்பீர மாக ஓட முடியும். விவசாயம், விவசாயிகள் மீட்கப் படும்போது, இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் கான தேவை அதிகரிக்கும். அப்போது சிறு, குறு, நடுத் தர தொழில், வர்த்தகத் துறைக்கு தேவையான கடன்  உதவி, மூலப் பொருட்கள் விலை கட்டுப்பாடு, மின்சார  மானியம் போன்ற ஆதரவு நடவடிக்கைகளை அரசு  மேற்கொள்ளும் போது, லட்சக்கணக்கான தொழில் முனைவோர்களும், பல கோடிக் கணக்கான தொழிலா ளர்களும் மறுமலர்ச்சி பெறுவார்கள். 140 கோடி மக்கள்  கொண்ட இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் சந்தை யுடன், புதிதாக சந்தை விரிவடையும்போது, அதற்குரிய  முறையில் தொழில்துறை உற்பத்தியும் பெருகும். ஆகவே  சிறைப்பட்டிருக்கும் இந்தியாவின் விவசாயத்தை திறந்து விடுவது தான் இந்திய தொழில் வளர்ச்சியின் மந்திர  சாவியாக இருக்கும்!  -வே.தூயவன்